இன்று உலக கபாப் தினம்! வீட்டிலேயே செய்து பார்ப்போமா..

துருக்கி பகுதியில் இறைச்சி உணவு சமைக்கப் பயன்படுத்திய முறையே கபாப் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் 2வது வெள்ளியன்று உலக கபாப் தினம் அனுசரிக்கப்படுகிறது.

வீட்டிலேயே எப்படி எளிமையாக சிக்கனை வைத்து கபாப் செய்யலாம் என அறிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்: துண்டுகளாக வெட்டிய எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ, தயிர் - 1/2 கப், இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்; கரம் மசாலா தூள், மிளகு தூள், சாட் மசாலா - தலா 1 டீஸ்பூன், கேசரி பவுடர் - 1 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, வெங்காயம், குடைமிளகாய் தலா ஒன்று.

செய்முறை: முதலில் சுத்தம் செய்த சிக்கனை ஃபோர்க் ஸ்பூனில் நன்றாக குத்தி விடவும். இதனால் மசாலா நன்றாக சிக்கனில் ஏறும்.

ஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், கேசரி பவுடர், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்

பின் அதில் சிக்கனை போட்டு, அதன் மேல் மசாலா பேஸ்ட்டை தடவி, உப்பு மற்றும் மிளகுத் தூளை சேர்த்து சுமார் ஒரு மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

நீண்ட குச்சியில், சிக்கனுடன், சதுர வடிவில் துண்டு துண்டுகளாக வெங்காயம், குடைமிளகாயை இடையில் சொருகி, கிரில் தட்டில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும்.

இறுதியில் அதன் மேல் சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு, மீண்டும் ஒரு நிமிடம் கிரிலில் வைத்து எடுத்து பரிமாற வேண்டும். யம்மியான சிக்கன் கபாப் ரெடி.