பணம் கொடுத்து வேலை என்றால்... உஷார்!சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

கல்லுாரி படிப்பை முடிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் ஆன்லைன் வாயிலாக வேலைத்தேடும் போது கவனமாக இருக்க வேண்டும் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

சைபர் கிரைம் பிரிவில் 2026 மார்ச் இறுதி வரை பதிவான, 2,234 புகார்களில், 1765 நிதி சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும், டிஜிட்டல் அரெஸ்ட், பண முதலீடு, வேலை ஆகிய மூன்று பிரிவுகளில் தான் அதிகம் ஏமாற்றப்படுகின்றனர்.

வீட்டில் இருந்தே வேலை; தினமும் ஆயிரத்தில் சம்பளம், பகுதி நேர வேலை, டாஸ்க் பேஸ் வேலை எனக்கூறி முதலில் சிறிய தொகை கொடுத்து நம்பவைக்கப்படுகிறது.

பின்னர் பெரிய தொகை கேட்பது அனைத்தும் மோசடியில் முடிவதை கடந்த காலங்களில் மக்கள் சிலர் அனுபவித்துள்ளனர்.

பல மடங்கு வருமானம், லாபம் என்றாலே உஷாராக கவனிக்க வேண்டும். குறிப்பாக, வேலை தேடுபவர்கள் சரியான தளங்களில் பதிவுகளை செய்ய வேண்டும்.

கட்டணம் செலுத்தினால் வேலை, ஆட்களை சேர்த்துவிடுவது, பணம் கட்டி பணம் பெறுதல் போன்ற வலைகளில் சிக்க வேண்டாம் என போலீசார் தெரிவித்தனர்.

சாதாரண அரெஸ்ட்தான் இருக்கிறது; டிஜிட்டல் அரெஸ்ட் என்ற ஒன்று இல்லை.

பேராசை காரணமாகவே பலர் ஏமாற்றப்படுகின்றனர். தெரியாத நிறுவனம், தெரியாத பொருட்கள் மீது அவசரப்பட்டு முதலீடு செய்யக்கூடாது