சோபகிருது ஆண்டே வருக.. சுபவாழ்வு தருக... இன்று தமிழ்ப்புத்தாண்டு !

உலகெங்கும் உள்ள தமிழர்கள் சித்திரை முதல் நாளையே புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, அசாம், மே.வங்கம், மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும், இலங்கை, நேபாளம், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளிலும் சித்திரையே புத்தாண்டு தினமாக உள்ளது.

பிரம்மா உலகைப் படைத்தது சித்திரை முதல் நாள்தான். நவக்கிரக நாயகன் எனப் பூஜிக்கப்படும் சூரியபகவான் இன்று மேஷ ராசியில் நுழைவதால் தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது.

இன்று வேப்பம் பூக்களைச் சேகரித்து, புளி, வெல்லம் சேர்த்து பச்சடி செய்வது சிறப்பு. இனிப்பு, கசப்பு, புளிப்பு என பல வகையான அனுபவங்களை கொண்டது வாழ்க்கை என்பதை இது உணர்த்துகிறது.

சித்திரையில் வரும் பவுர்ணமி சிறப்பு வாய்ந்தது. இந்நாளில்தான் சித்திர குப்தர் தோன்றினார். எனவே, விரதம் இருந்து, 'நாங்கள் இனியும் பாவம் செய்யாமல் இருக்க நீதான் துணையாக இருக்க வேண்டும்' என வேண்டுவர்.

அட்சய திரிதியை என்னும் பொன்னான நாள் வருவதும் இம்மாதமே. அன்று அரிசி, கோதுமை, தயிர், மோர், குடை, ஆடை, தானியம், பழம் போன்றவற்றை தானம் செய்தால் வளமான வாழ்வு அமையும்.