நண்பேன்டா... இன்று சர்வதேச நாய்கள் தினம் !

பலரின் குடும்பத்தில் ஒரு முக்கிய உறுப்பினராக வலம் வருபவை நாய்கள். நான்கு கால் நண்பனான நாயை பிடிக்காதவர்களே இல்லை எனலாம்.

பலரின் வீடுகளையும் நாய்கள் மகிழ்ச்சியாக மாற்றுகின்றன. அவைகளுடன் சிறிது நேரம் வாக்கிங் சென்று வந்தாலே போதும்; பலமடங்கு புத்துணர்ச்சி கிடைப்பதை உணரலாம்.

கோபம், வருத்தம், மகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளையும் நொடிப்பொழுதில் கணித்து அதற்கேற்ப வளர்ப்பாளர்களின் அருகிலேயே இருக்கும்.

எனவே, பலரும் நாய்களை தத்தெடுக்க முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் இன்று (ஆக., 26) சர்வதேச நாய்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

அன்பும், கவனிப்பும் தேவைப்படும் ஆயிரக்கணக்கான தெருநாய்களின் மீது கவனம் செலுத்த வேண்டும். உள்ளூர் அரசு நிர்வாகம் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்பூசி போடுவது, உணவளிப்பது, சிறுவர்கள் மற்றும் குறிப்பிட்ட பகுதிவாசிகளால் தாக்கப்படுவதிலிருந்து காப்பது போன்ற நடவடிக்கைகளை உள்ளூர் நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும்.

நாய்களின் உருவம், இனம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அவைகளின் வாழ்வாதாரத்துக்கு தேவையானவற்றை செய்ய மக்களும் முன்வர வேண்டும் என்பதை இந்த நாள் வலியுறுத்துகிறது.

நாய்களை பராமரிக்கும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு உங்களால் முடிந்தளவு நன்கொடை, உணவு போன்ற உதவிகளை அவ்வப்போது செய்யலாம்.