உடலுக்கு வலுவூட்டும் மோர் களி

தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 200 கிராம், மோர் - 4 கப் அல்லது தயிர் - 2 கப் , மோர் மிளகாய் - 10, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்.

நெய் - 3 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 50 மில்லி, கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன், உப்பு - தேவையானளவு.

கடாயில் அரிசி மாவு, தயிர், அரிசி மாவு அளந்த கப் அளவில் இரண்டரை மடங்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும்.

மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானவுடன், மோர் மிளகாயை பாதியாக உடைத்து போட்டு வறுத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்.

பின், அரிசி மாவு, தயிர், தண்ணீர் கலவையை ஊற்றி, மிதமான தணலில் ஒரு மணி நேரம் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.

தண்ணீர் வற்றி மோர் களி ஓரளவுக்கு கெட்டியானவுடன், தேவையானளவு உப்பு சேர்த்து, நல்லெண்ணெய் ஊற்றி கிளறவும்.

மோர் களி கெட்டியான பின், சதுர வடிவிலான பாத்திரத்திற்கு மாற்றி, அரைமணி நேரம் ஆறவிட்டால், களி கேக் போல மாறிவிடும்.

அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, தோசைக்கல்லில் நெய் ஊற்றி பனீர் ரோஸ்ட் செய்வது போல, மோர் களி துண்டுகளை போட்டு வறுத்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.

அல்லது அப்படியேவும் ஊறுகாய் தொட்டும் பாரம்பரிய சுவையில் சாப்பிடலாம்.