துாக்கமின்மையால் வரும் புது பிரச்னை
உடல் ஆரோக்கியத்திற்கு உணவு எவ்வளவு அவசியமோ அதேயளவு அவசியமானது துாக்கம். சரியான துாக்கம் இல்லாதது மனப்பிரச்னைகளை உருவாக்கும்.
தற்போது குவைத் நாட்டிலுள்ள டிடிஐ எனும் ஆய்வு மையம் துாக்கமின்மையால் ஏற்படும் ஒரு புதுப் பிரச்னையைக் கண்டறிந்துள்ளது.
ஆய்வில், ஆரோக்கியமான உடல்வாகு கொண்ட 237 பேர், 24 மணி நேரம் விழித்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
துாங்காமல் இருந்தபோது அவர்களின் உடலில் என்சிஎம் (நான் கிளாசிக் மோனோசைட்ஸ்) செல்கள் அதிகரித்திருப்பதை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து அவர்கள் வழக்கம்போல் சாதாரணமாகத் துாங்கியதால், அடுத்த 2 நாட்களில் இந்த என்சிஎம் எண்ணிக்கை சராசரியானது.
துாக்கமின்மையால் தொடர்ந்து அவதிப்படுபவர்களுக்கு இந்தச் செல்களின் எண்ணிக்கை அசாதாரணமாகவே இருக்கும்.
என்சிஎம் என்பவை ரத்த வெள்ளை அணுக்களில் ஒரு வகை. நம் உடலில் நோய் ஏற்படும்போது இவை பெருகும். கிருமிகளை எதிர்த்துப் போராடும்.
ஆனால் அனாவசியமான நேரங்களில் இவை பெருகுவது நல்லதல்ல. இவற்றின் எண்ணிக்கை நம் உடலில் தொடர்ந்து அதிகரித்தாலும் ஆபத்து.
இதனால் சாதாரண வயிற்று வலி, காய்ச்சல் முதல் சில வித புற்றுநோய்கள் வரை ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, தொடர் துாக்கமின்மை மிக ஆபத்தானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
வேலைச்சூழல், அதிக நேரம் கணினி போன்ற டிஜிட்டல் திரைகளைப் பார்ப்பதால் துாக்கம் கெடுகிறது. ஆழ்ந்த உறக்கத்துக்கு இவற்றைக் குறைக்க வேண்டுமென்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.