பாலைவனத்தின் நடுவில் அழகிய சோலைவனம்.. ஹுகாச்சினா!
பாலைவனத்தையும் அற்புத சோலைவனமாக மாற்றும் வல்லமை கொண்டது இயற்கை. அதுபோன்ற பாலைவனத்தில் உள்ள சோலைவனம்தான் ஹுகாச்சினா.
ஹுகாச்சினா தென்மேற்கு பெருவில் மணல் திட்டுக்களால் சூழப்பட்ட ஒர் இயற்கை சோலைவனம். தெற்கு லீமா பாலைவனத்தின் நடுவில் ஐகா நகருக்கு மேற்கே 5 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.
இங்கு வெறும் நூறு குடிமக்கள் மட்டுமே நிரந்தரமாக வசிக்கின்றனர். ஆனால், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வது குறிப்பிடத்தக்கது.
பாலைவனம் என்பதால் மணல் காற்றும், வெப்பமும் அதிகமாக இருக்கும் என்று எண்ண வேண்டாம். இங்கு ஆண்டு முழுவதும் அதிகபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வரைதான் வெப்பம் பதிவாகிறது.
தற்போது பெரு அரசாங்கம் இயற்கையான இந்த ஏரியைச் சுற்றி தங்கும் விடுதிகள் கட்டி, போட்டிங் உள்ளிட்ட சில பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கி ஒர் சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது.
சாண்ட் போர்டிங், டியூன் பக்கி கார் ரைட், போட்டிங், மணல் திட்டுகளில் ஏறும் விளையாட்டு போன்ற ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு உள்ளன.
மாலை நேரத்தில் மணல் திட்டுகள்மீது ஏறி, உச்சியில் நின்று சூரியன் அஸ்தமிக்கும் காட்சியைக் காணலாம்.
ஹுகாச்சினாவிலிருந்து பத்து நிமிட தொலைவில் உள்ள ஐகா திராட்சைத் தோட்டங்கள் மற்றும் தேசிய பானமான பிஸ்கோ (ஒரு வகை இனிப்பு ஒயின்) உள்ளிட்டவை இங்கு மிகப் பிரபலம்.