இன்று உலக போலியோ தினம்
உலகை அச்சுறுத்திய போலியோ நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த ஜோனாஸ் சால்க்கை கவுரவிக்கும் விதமாக அக். 24ல் உலக போலியோ தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இளம்பிள்ளை வாதம் என கூறப்படும் 'போலியோமியெலிட்டிஸ்', சுருக்கமாக போலியோ என அழைக்கப்படுகிறது.
போலியோ வைரஸ் மூலம் ஏற்படும் இந்த தொற்று நோய் மற்றவர்களுக்கு எளிதில் பரவும். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகம் தாக்கும்.
பாதிக்கப்பட்டவர்களில் 90 - 95 சதவீதம் பேருக்கு அறிகுறியே தெரியாது. மீதி 5 - 10 சதவீதம் பேருக்கு காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, கழுத்து, கை, காலில் வலி ஏற்படும்.
இந்நோயால் உயிரிழப்பும், உடல் உறுப்புகளில் குறைபாடும் ஏற்பட்டது. பெரும்பாலும் கால்களையே தாக்கியது.
20ம் நுாற்றாண்டில் உலகம் முழுவதும் குழந்தைகளை பாதிக்கும் பெரிய நோயாக உருவெடுத்தது. லாண்ட்ஸ்டீனியர் என்பவர் 1908ல் இந்நோயை முதலில் கண்டறிந்தார்.
முதல் தடுப்பு மருந்தை 1952ல் ஜோனாஸ் சால்க் கண்டுபிடித்தார். 1955ல் தாமஸ் பிரான்சிஸ், ஊசி மூலம் செலுத்தும் மருந்தை கண்டறிந்தார்.
வாய் வழியாக செலுத்தும் மருந்தை ஆல்பர் சபின், 1957ல் கண்டறிந்தார். போலியோவை குணப்படுத்த இயலாது. ஆனால் வராமல் தடுக்க முடியும்.
உலகில் தற்போது நைஜீரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மட்டுமே போலியோ பாதிப்பு இருக்கிறது. இந்தியா 2012 ஜன., 13ல் போலியோ இல்லாத நாடாக உருவானது.