சுவையான ஆப்பிள் அல்வா ரெசிபி
தேவையான பொருட்கள்: ஆப்பிள் 3, நெய் 4 டீஸ்பூன், சர்க்கரை 1/2 கப், பால் 1/2 கப், ஏலக்காய் துாள் 1/2 டீஸ்பூன், முந்திரி, பாதாம் தேவையான அளவு.
செய்முறை: ஆப்பிள் தோலை நீக்கி விட்டு, துருவிக் கொள்ளவும். பின், ஒரு வாணலியில் நெய் ஊற்றி, துருவிய ஆப்பிளை சேர்த்து 7 நிமிடங்கள் வதக்கவும்.
ஆப்பிள் வெந்ததும், சர்க்கரை சேர்த்து கிளறவும். சர்க்கரை கரைந்து கலவை குழைவாக மாறும். அப்போது, பால் ஊற்றி நன்கு கிளறவும்.
இந்த கலவை வாணலியில் ஒட்டாமல் வரும் வரை கிளற வேண்டும். ஏலக்காய் துாள், நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து கிளறி இறக்கவும்.
'சுவையான ஆப்பிள் அல்வா' தயார். இந்த அல்வாவை சுடச்சுட சாப்பிட்டாலும் சுவையாகவே இருக்கும். பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
குறிப்பு: ஆப்பிள் அல்வா செய்யும் போது, ஆப்பிள் புளிப்பாக இருந்தால் சர்க்கரை அதிகமாக தேவைப்படும்.
தண்ணீர் முழுமையாக வற்றி, நெய் பிரிந்து வரும் வரை கிளறினால் அல்வா நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.