இனிப்பு சாப்பிடாமலேயே ரத்த சர்க்கரை ஏன் அதிகரிக்கிறது?
பொதுவாக, சாக்லேட், இனிப்பு, கேக், குளிர்பானம் போன்றவற்றை சாப்பிட்டால்தான், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்குமென பலர் நினைக்கின்றனர்.
ஆனால், அது உண்மையல்ல. இனிப்பு சாப்பிடாதவர்களுக்கும் ரத்த சர்க்கரை அதிகரிக்கலாம்.
இதற்கு காரணம், ரத்த சர்க்கரை அளவை உணவு மட்டுமல்ல; இன்சுலின் செயல்பாடு, கல்லீரல், மன அழுத்தம், தூக்கம், உடல் இயக்கம் உள்ளிட்ட பல காரணிகளும் பாதிக்கின்றன.
இன்சுலின் என்பது ரத்த ஓட்டத்திலுள்ள குளுக்கோஸை உடலின் செல்களுக்குள் கொண்டு செல்ல உதவும் ஒரு ஹார்மோன்.
இன்சுலின் எதிர்ப்பு ஏற்பட்டால், சர்க்கரையளவு படிப்படியாக அதிகரிக்கக்கூடும். உடல் பருமன், உடல் உழைப்பின்மை, தூக்கமின்மை, மன அழுத்தம், மரபணு என பல காரணங்கள் இதற்குள்ளன.
நாம் சாப்பிடாத நேரங்களிலும் உடலுக்கு சக்தி தேவைப்படுவதால், கல்லீரல் குளுக்கோஸை உற்பத்தி செய்து அல்லது சேமித்து வைத்திருப்பதை வெளியிடுகிறது.
ஆனால், நீரிழிவு உள்ளவர்களுக்கு இந்த செயல்முறை பாதிக்கப்படுவதால், கல்லீரல் அதிக குளுக்கோஸை வெளியிடும்; சிலருக்கு வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அதிகமாக இருக்கலாம்.
மன அழுத்தம் ஏற்பட்டால் உடலில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கின்றன.
இவை கல்லீரல் குளுக்கோஸை உற்பத்தி செய்து ரத்தத்தில் வெளியிடுவதை அதிகரிப்பதால், மன அழுத்தம் அல்லது கவலையுள்ள போது உணவு உண்ணாமலேயே ரத்த சர்க்கரை உயரும்.
தொடர்ச்சியாக போதிய தூக்கம் இல்லாதது, உடலில் இன்சுலின் செயல்பாட்டை பாதித்து, ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.
மேலும், கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் அளவை தூக்கக் குறைபாடு அதிகரிப்பதால், சிலருக்கு ரத்த சர்க்கரை அளவு உயர வாய்ப்புள்ளது.
தொடர்ச்சியான உடற்பயிற்சி இல்லாதது, தசைகள் குளுக்கோஸை பயன்படுத்தும் திறனை குறைத்து, காலப்போக்கில் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை பாதிக்கக்கூடும்.
குறிப்பாக வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு இருப்பது, இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுத்து ரத்த சர்க்கரை அளவை உயர்த்தலாம்.