PUBLISHED ON : ஏப் 30, 2026 12:00 AM

அ திகம் ஆராயப்பட்டவை என்றால், அவை புவியீர்ப்பு விசையும், ஒளியுமாகத் தான் இருக்கும். இருந்தாலும் அவை இன்றும் ஆச்சரியங்களைத் தந்தபடியே இருக்கின்றன. உதாரணத்திற்கு, புவியீர்ப்பு விசை, ஒளியின் மீது மிக மெல்லிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதை துல்லியமாக அளக்கவும், அந்த அளவையை பயன்படுத்தவும் முடியும் என்கிறது, ‘சயன்டிபிக் ரிப்போர்ட்ஸ்’ இதழில் வெளியான ஆய்வு.
ஒளியின் பயணத்தை புவியீர்ப்பு விசை சற்றே பாதிக்கிறது. பூமிக்கு அடியில், பெரிய நீரோட்டம், தாதுப் பாறைகள், புவிக் குழம்புகள் உள்ளிட்டவை புவியீர்ப்பின் அடர்த்தியை பாதிக்கிறது. இதனால், மேற்பரப்பில் பயணிக்கும் ஒளியை ஈர்க்கும் விதமும் மாறுகிறது. இந்த மாறுதல்களை துல்லியமாக அளக்க கருவியை உருவாக்க வேண்டும் என்கிறது சயன்டிபிக் ரிப்போர்ட்ஸ் ஆய்வுக்கட்டுரை.
ஒளியை மையமாக வைத்து உருவாக்கப்படும் புவியீர்ப்புமானி, நிலத்தடி நீர்மட்டம் குறைவது, எரிமலைக் குழம்பு நகர்வது, மறைந்திருக்கும் கனிம வளங்கள் மற்றும் பூமிக்கடியில் சேமிக்கப்பட்ட கார்பன்-–டை–-ஆக்சைடு ஆகியவற்றை நம்மால் துல்லியமாக அறிய முடியும். புவியீர்ப்பை அளக்க தற்போதுள்ள கனமான கருவிகளுக்குப் பதிலாக, புதிய ‘போட்டானிக்’ சென்சார்களைக் கொண்ட கருவி மிகச் சிறியதாக இருக்கும்.
வணிக ரீதியாகவும் இதற்குப் பெரும் வரவேற்பு உண்டு. இவற்றை நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது விமானங்களில் எளிதாகப் பொருத்த முடியும்.
இருப்பினும், இந்தத் தொழில்நுட்பம் இன்னும் ஆய்வக நிலையிலேயே உள்ளது. எத்தனை வளர்ந்த துறைகளாக இருந்தாலும், அவற்றிலும் புதிய திருத்தங்களுக்கு எப்போதும் இடமுண்டு என்பதையே இக்கண்டுபிடிப்பு உணர்த்துகிறது.

