/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
நட்சத்திர மண்டலம் கண்டு தெளியும் பூச்சி!
/
நட்சத்திர மண்டலம் கண்டு தெளியும் பூச்சி!
PUBLISHED ON : ஜூலை 10, 2025 12:00 AM

ஒரு சின்னஞ்சிறு அந்துப்பூச்சி நட்சத்திரங்களைக் கொண்டும், பூமியின் காந்த மண்டலத்தைக் கொண்டும் திசை அறிகிறது என்றால் நம்ப முடிகிறதா?
பொகோங் மோத்ஸ் (Bogong moths) என்று அறியப்படும் இந்த அந்துப்பூச்சி ஆஸ்திரேலியக் கண்டத்தில் வாழ்பவை. ஒவ்வோர் ஆண்டும் வசந்த காலத்தின்போது இவை, ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியிலிருந்து நகரத் துவங்குகின்றன.
ஆயிரம் கி.மீ. பயணம் செய்து ஆஸ்திரேலியன் ஆல்ப்ஸ் மலைத் தொடர்களை அடைகின்றன. அங்குள்ள குளிர்ச்சியான குகைகளில் இவை கோடைக் காலம் முழுதும் செலவிடுகின்றன.
வெப்பம் குறைந்த பின் இலையுதிர் காலத்தில் இவை தங்கள் பழைய இடங்களுக்கே சென்றுவிடுகின்றன. 2.5 -- 3.5 செ.மீ., நீளம், 4 -- 5 செ.மீ., அகலம் (இறக்கை அளவு) மட்டுமே கொண்ட இந்தச் சிறிய உயிரினத்தால் இவ்வளவு துாரம் எப்படி வலசை வரமுடிகிறது என்று ஆஸ்திரேலிய தேசியப் பல்கலை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
இந்தப் பூச்சிகளை ஆய்வுக்கூடத்திற்குள் வைத்து ஆய்வு செய்தனர். வானில் உள்ள நட்சத்திரங்கள், பூமியின் காந்த மண்டலம் போன்றே ஆய்வகத்தில் மாதிரி சூழலை உருவாக்கினர். இவற்றை உணர்ந்துகொண்டு பூச்சிகள் சரியான திசையில் பறந்தன. பின் காந்த மண்டலத்தை அப்படியே வைத்துக் கொண்டு நட்சத்திரங்களின் திசையை மாற்றினர். இதனால் குழப்பமடைந்த பூச்சிகள் நட்சத்திரங்களை விடுத்து காந்த மண்டலத்தை மட்டும் கொண்டு திசையறிந்தன.
இந்தப் பூச்சிகளின் திசை அறியும் திறன் ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
இவை அழிவின் விளிம்பில் உள்ளன. எனவே அவை எவ்வாறு வலசை செல்கின்றன என்று அறிந்து கொள்வது, அவற்றை அழிவிலிருந்து காக்க உதவும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.