/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
கிருமிகளை காட்டிக்கொடுக்கும் நுண்ணெகிழி
/
கிருமிகளை காட்டிக்கொடுக்கும் நுண்ணெகிழி
PUBLISHED ON : ஜூன் 05, 2025 12:00 AM

நீரில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் நுண்ணெகிழிகளால் ஏற்படும் முக்கியப் பிரச்னை நோய்க்கிருமிகளின் பரவல் தான். இவற்றை நீரிலிருந்து நீக்குவது அவ்வளவு சுலபமல்ல. ஆபத்தான நுண்ணுயிர்கள் நெகிழிகள் மீது தங்கி, பெருகிப் பரவும். இது சுகாதாரத்திற்கு ஆபத்து.
ஆனால், நுண்ணெகிழிகளின் இந்தத் தன்மை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிறது சமீபத்திய ஆய்வு.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவுகள் நீக்கப்பட்டு வெளியேற்றப்படும் நீர் பாதுகாப்பாக உள்ளதா என்று கண்காணிப்பது அவசியம். இந்த நீரின் மாதிரி ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு அதில் ஆபத்தான கிருமிகள் உள்ளனவா என்று ஆராயப்படும்.
இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இந்த ஆய்வு 24 மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே செய்யப்படும். ஒவ்வொரு மணி நேரமும் கண்காணிக்கும் நடைமுறை இல்லை. ஏனென்றால், கழிவுநீரில் கிருமிகள் இருந்தாலும் அவை பெருகுவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும்.
கிருமிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருந்தால் தான் சோதனையில் தெரியவரும். எனவே அவை சீக்கிரம் பெருகுவதற்கு வழி செய்தால் அவற்றைக் கண்டறிவது எளிதாகிவிடும்.
இதை உணர்ந்த ஸ்காட்லாந்து பல்கலை ஆய்வாளர்கள், நுண்ணெகிழிகளை இவற்றுக்குப் பயன்படுத்தினர். அதாவது, நுண்ணெகிழிகளாலான 2 மி.மீ., அகலம் கொண்ட சிறிய உருண்டைகளை வடிகட்டியில் வைத்து நீரில் இட்டனர்.
கிருமிகள் உருண்டைகள்மீது படிந்து வேகமாக வளரத் துவங்கின. அவற்றை ஆராய்ந்து அவை எந்த வகையைச் சேர்ந்தவை என்று கண்டறிந்தனர். எனவே மிகக் குறுகிய காலத்தில் கிருமிகளைக் கண்டறிய இப்படியான நுண்ணெகிழிகளைப் பயன்படுத்த முடியும் என்று ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.