PUBLISHED ON : டிச 19, 2024 12:00 AM

கெப்லர் 51 என்பது 50 கோடி ஆண்டுகள் பழமையான ஒரு நட்சத்திரம். இது நமது பூமியில் இருந்து 2,615 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
இந்த நட்சத்திரத்தை மூன்று கோள்கள் சுற்றி வருகின்றன. இவை அளவில் நமது சூரிய மண்டலத்தில் உள்ள சனிக்கோளை ஒத்தவை.
இவற்றின் வளிமண்டலம் ஹைட்ரோஜன், ஹீலியத்தால் ஆனது. இவை பார்ப்பதற்குப் பெரிதாக இருந்தாலும், அடர்த்தி மிகக் குறைவு. இந்தக் கோள்கள் கெப்லர் 51 நட்சத்திரத்திற்கு மிக அருகே இருக்கின்றன.
சமீபத்தில் விஞ்ஞானிகள் இந்த நட்சத்திரத்தைச் சுற்றி வரும் நான்காவது கோளைக் கண்டறிந்துள்ளனர். 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து பல்வேறு தொலைநோக்கிகள் கொண்டு ஆய்வு செய்யப்பட்டதில் தற்போது இது கண்டறியப்பட்டுள்ளது.
மற்ற மூன்று கிரகங்கள் குறைந்த அடர்த்தியும் பெரிய அளவு கொண்டுள்ளன. இந்தப் புதிய கோளும் அவற்றைப் போன்றது தானா என்பது இதுவரை தெளிவாக அறியப்படவில்லை.
இதன் சுற்றுவட்டப் பாதை நம்முடைய சூரிய மண்டலத்தில் உள்ள வெள்ளியின் சுற்றுவட்டப் பாதையை விடச் சற்றே பெரிதாக உள்ளது. இது அதனுடைய நட்சத்திரத்தைச் சுற்றிவர 264 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.
இந்தப் புதிய கோளைப் பற்றி விஞ்ஞானிகள் மேலும் ஆராய்ந்து வருகிறார்கள். எதிர்காலத்தில் இன்னும் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்று நம்பலாம்.

