PUBLISHED ON : ஜூன் 12, 2025 12:00 AM

1. பெரிய மெகலனிக் மேகம் என்பது நமது பால்வெளி மண்டலத்தின் துணை கேலக்ஸி. இது பூமியின் தென் அரைக்கோளத்தில் இருந்து பார்த்தால் தெரியும். நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி இதை மிக அழகாகப் படம் எடுத்துள்ளது. இளஞ்சிவப்பு நட்சத்திரங்கள் ஆங்காங்கே ஜொலிக்க, மேகங்களால் சூழப்பட்டுப் பார்ப்பதற்குப் பல வண்ணங்களை உடைய பஞ்சு மிட்டாய் போல் காட்சி தருகிறது. இந்தப் படம் தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.
2. கேரளா, மஹாராஷ்டிராவின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இரண்டு புதிய பூரான் இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு பாலிடிரெபானம் க்ஸிபோசம், பாலிடிரெபானம் ஸ்பினாட்டம் என்ற அறிவியல் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
3. பொதுவாகச் சிறிய நட்சத்திரத்தைச் சிறிய கோள் தான் சுற்றி வரும். ஆனால், சூரியனின் நிறையில் வெறும் 20 சதவீதம் மட்டுமே உடைய TOI - 6894 எனும் சிறிய நட்சத்திரத்தைச் சனியை விடச் சற்றே பெரிய கோள் ஒன்று சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
4. சாக்கடல் சுருள் ஏடுகள் (The Dead Sea Scrolls) எனும் பழமையான ஆவணங்கள் பொ.யு.மு.160ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என்று தொல்லியலாளர்கள் கூறி வந்தனர். தற்போது ஏ.ஐ. உதவியுடன் ஆராய்ந்ததில் அவை பொ.யு.மு.230ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என்று தெரியவந்துள்ளது.
5. நம் சூரிய மண்டலத்தில் இருந்து 2,472 ஒளியாண்டுகள் தொலைவில் கெப்லர் - 725c எனும் கோளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியை விட 10 மடங்கு அதிக நிறையை உடையது இந்தக் கோள். இது தன்னுடைய நட்சத்திரத்தில் இருந்து உயிர்கள் வாழ்வதற்குச் சாத்தியமான துாரத்தில் உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.