PUBLISHED ON : பிப் 12, 2026 07:24 AM

1. அமெரிக்காவில் ஏ.ஐ., பயன்பாட்டால் ஆண்டுக்கு 8.96 லட்சம் டன் கார்பன் உமிழ்வு நிகழ வாய்ப்புள்ளது. இது 3 லட்சம் வீடுகளின் மின் நுகர்வால் ஏற்படும் உமிழ்வுக்குச் சமம். ஏ.ஐ., கட்டமைப்பு சூழலுக்கு கேடில்லாத வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்பதையே இது வலியுறுத்துவதாக மசாசூசெட்ஸ் பல்கலை ஆய்வு தெரிவிக்கிறது.
![]() |
2. 'செரின்' என்ற சத்து, மயிர்க்கால் செல்களை, காயம் ஆற்றும் செல்களாக மாற்றுவதாக, சால்க் இன்ஸ்டிடியூட்டின் ஆய்வு தெரிவிக்கிறது. செரின் சத்துள்ள உணவுகள், செரினை பயன்படுத்தும் புதிய சிகிச்சைகள் வாயிலாக காயங்களை மிக வேகமாக குணப்படுத்த முடியும்.
![]() |
3. நெதர்லாந்திலுள்ள உட்ரெக்ட் பல்கலை ஆய்வில், எஸ்.ஜி.எல்.டி., 2 வகை மருந்துகள் சிறுநீரகத்தின் கட்டமைப்பையும் ஆற்றலையும் சிதையாமல் காப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது மனிதர்களின் சிறுநீரகம் மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது.
![]() |
4. செடிகள் ஒன்றை யொன்று தொடும்போது, கடும் ஒளியைத் தாங்கும் சமிக்ஞைகளைப் பரிமாறிக்கொள்கின்றன. மேற்கு ஆஸ்திரேலிய பல்கலையின் இந்த ஆய்வு, தாவரங்களுக்கு இடையே இதுவரை அறியப்படாத ஒரு ரகசிய தகவல் தொடர்பு முறை இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
![]() |
5. சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள், மரத்திலுள்ள 'லிக்னின்' மூலம் புதிய வெப்பக் காகிதத்தை உருவாக்கியுள்ளனர். நச்சுத்தன்மையுள்ள பிஸ்பெனால் ரசாயனங்களைத் தவிர்த்துள்ள இக்காகிதம், தெளிவான அச்சுடன் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பான மாற்றாக அமையும்.





