PUBLISHED ON : டிச 18, 2025 10:21 AM

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டது, 'வெர்டிசிலின் ஏ'எனும் அரிய வகை பூஞ்சை. அதன் மூலக்கூறினை, அமெரிக்காவின் எம்.ஐ.டி., நிலைய வேதியியலாளர்கள், முதன்முறையாகச் செயற்கையாக உருவாக்கியுள்ளனர். மிகச் சிக்கலான வேதியியல் கட்டமைப்புள்ள இந்த செயற்கை பூஞ்சையை உருவாக்க, 16 கட்டங்களைக் கொண்ட நுட்பமான தயாரிப்பு முறையை அவர்கள் வடிவமைத்துள்ளனர்.
இந்தச் செயற்கை மூலக்கூறிலிருந்து உருவாக்கப்பட்ட வேதிப்பொருட்கள், குழந்தைகளைத் தாக்கும் வீரியமிக்க ஒருவகை மூளைப் புற்றுநோயை உருவாக்கும், செல்களுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுவது ஆய்வகச் சோதனையில் உறுதியாகியுள்ளது.
இயற்கையில் மட்டுமே கிடைத்து வந்த இந்த மூலக்கூறைத் தற்போது ஆய்வகத்திலேயே உருவாக்க முடிவது மருந்து ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு வசதியாகியுள்ளது. ஏனெனில், மேலும் ஆராய்ந்து, புற்றுநோய்க்கான புதிய மருந்துகளை வடிவமைப்பது எளிமையாகி இருக்கிறது. இருந்தாலும், இது மனிதப் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு, விலங்கு மற்றும் மருத்துவப்பரிசோதனைகள் அவசியம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

