திருப்பதிக்கு அப்பனாம் கள்ளழகர் பாதம் படாத பகுதியாம்
திருப்பதிக்கு அப்பனாம் கள்ளழகர் பாதம் படாத பகுதியாம்
PUBLISHED ON : நவ 08, 2026

திருப்பதிக்கு அப்பன் ஸ்ரீனிவாசப் பெருமாள் என்ற பெருமையுடையவர் மதுரை அப்பன்திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் மூலவர். இவரை முதல் திருப்பதி என்றும் சொல்வர். திருப்பதி சென்று ஸ்ரீனிவாசனைப் பார்க்க முடியாதவர்கள் இங்கு வந்து ஸ்ரீனிவாசப் பெருமாளைப் பார்த்துச் சென்றால் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்டது இக்கோயில். இது சந்திரன் ஸ்தலம். ரோகிணி, அஸ்தம், திருவோண நட்சத்திரங்கள் சந்திரனுக்குரியது. திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசனும் அப்பன் திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசப்பெருமாளும் திருவோண நட்சத்திரத்தில் சந்திரனாக காட்சி தருகின்றனர். 450 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது இக்கோயில்.
யாழி வடிவ 12 துாண்கள் நிறைவுபெறாமல் முன்புறம் இரண்டு வரிசைகளில் நிறுவப்பட்டுள்ளது. முன்புற முதல் துாண்களில் பல்வேறு உருவங்கள் செதுக்கப்பட்டும் மற்ற துாண்களில் பூ வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் இருப்பதைப் போன்றே முதல் துாணில் பல்லி உருவம் செதுக்கப்பட்டுள்ளது. உடலில், தலையில் பல்லி விழுந்தால் அபசகுணமாக பார்ப்பவர்கள் துாணில் உள்ள பல்லி சிலையை சேவித்தால் பலன் கிடைக்கும் என்கிறார் அர்ச்சகர் சுரேஷ்குமார் பத்மநாபன்.
கோயிலின் சிறப்பு குறித்து அவர் கூறியதாவது: வலது பக்கம் மூலவராக அலர்மேல் மங்கை தாயாரும் உற்சவராக பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் பத்மாவதி தாயாரும் இடதுபக்கம் ஆண்டாள் நாச்சியாரும் காட்சி தருகின்றனர். மூலவராக தாயார் முகம் தெய்வீகப் புன்னகை சிந்துவது அற்புதம்.
முன்புறத்தில் அஞ்சலி விநாயகர், கருப்பண்ணசாமி, முனியாண்டி சன்னதிகள், பெருமாள் சன்னதிக்கு எதிராக முன்புறத்தில் கருடாழ்வார் சன்னதி, பின்பக்க கன்னி மூலையில் தும்பிக்கையாள்வார் (விநாயகர்), தன்வந்திரி, பஞ்சமுக விநாயகர் சன்னதிகளும் உள்ளன.
பஞ்சமுக ஆஞ்சநேயர்: வராகர், நரசிம்மர், கருடர், ஆஞ்சநேயர், ஹயக்ரீவர் என ஐந்து முக வடிவங்களில் பஞ்சமுக ஆஞ்சநேயர் காட்சி தருவது இங்கு காணப்படும் தனிச்சிறப்பு. கள்ளழகரை கைகூப்பி வணங்கி வரவேற்பது போன்று காட்சி தருவது அஞ்சலி ஆஞ்சநேயர்.
இங்கு பெருமாள் சரணாகதி தத்துவத்தில் காட்சியளிக்கிறார். இந்த கலியுகத்தில் என்னை அடை... என் திருவடியை பற்றிக் கொள்... வேறெந்த சிந்தனையும் வேண்டாம் என்பதே சரணாகதி. பங்குனி உத்திரத்தில் பெருமாளும் தாயாரும் சேர்ந்து அருள் வழங்குவது இன்னும் சிறப்பு.
சித்திரைத் திருவிழாவிற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் வரும் போதும் மீண்டும் மதுரையில் இருந்து அழகர்கோவில் செல்லும் போதும் அழகரின் பாதம் படாத இடம், இந்த ரோட்டுப் பகுதி தான். கோயிலின் 16 கால் சவுக்கு (சவுக்கை) மண்டபத்திற்குள் கள்ளழகர் எழுந்தருளி அப்படியே சென்றுவிடுவார்.
அதாவது ரோட்டின் இருபக்கமும் அழகரின் பாதம் படாமல் இந்த மண்டபத்தில் மட்டும் படும். இந்த இடத்தில் அழகரை சேவித்து 'வேண்டினால்' அந்த வேண்டுதல் மீண்டும் அழகர் எழுந்தருள்வதற்குள் நிறைவேறிவிடும். சித்திரைத் திருவிழாவில் கள்ளர் திருக் கோலத்திலும், ஆடித் தேரோட்டத்தில் சுந்தரராஜன்பட்டிக்கு ராஜாங்க திருக்கோலத்தில் வரும் போதும் அழகர் பாதம் படாது.
சிவனுக்குரிய வில்வமரம் இந்த கோயிலின் ஸ்தல விருட்சம். இங்கு வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். திருப்பதி ஏழுமலையானை பார்க்க முடியாதவர்கள் அவருக்கு வைத்த நேர்த்திக்கடனை இங்கு செய்யலாம். இவருக்கு வைத்த நேர்த்திக்கடனை திருப்பதியில் வைத்தால் விடமாட்டார். கனவில் வந்து கேட்பார் என்பது நம்பிக்கை என்றார்.
