தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/தீபாவளி மலர்/சிறைக்குள் சிலிர்த்த சிறகுகள்

சிறைக்குள் சிலிர்த்த சிறகுகள்

சிறைக்குள் சிலிர்த்த சிறகுகள்


PUBLISHED ON : நவ 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆயுதம் செய்யப் பழகுவோம்...

நல்ல காகிதம் செய்யப் பழகுவோம்...'

என்ற மகாகவி பாரதியார், புத்தகங்கள் மனிதனுக்குப் புதிய உலகை காட்டுவதோடு, அடிமைத்தனத்தில் இருந்து மனதை விடுவிக்கும் என்றார்.

அந்த பாரதி சிறைப்பட்ட கடலுார் சிறையில் இருந்து, இன்று 81 எழுத்தாளர்கள் புதிதாய் பிறந்துள்ளனர். குற்றவாளியாக வந்தவர்கள் இன்று கவிஞராக, நாவலாசிரியராக, கட்டுரையாளராக மாறி இருக்கின்றனர். பல்வேறு தலைப்புகளில் 85 நுால்களை எழுதி, வெளியிட்டு விழா நடத்தி ஆச்சரியப்படுத்தி உள்ளனர். இதற்கு துாண்டுகோலாக இருந்தவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு.

தலைமை செயலராக இருந்தபோது 'எழுதுக' இயக்கத்தினர் இறையன்புவை அணுகினர். இறையன்பு வழிகாட்டுதலில் வடசென்னை கண்ணகி நகரில் எழுதுக இயக்கத்தின் முயற்சியால் 50 சிறுவர்கள் எழுத்தாளராக மாறி புத்தகங்களை வெளியிட்டனர். அந்த நம்பிக்கையில் கடலுார் சிறைக்கு இந்த இயக்கத்தினர் வந்தனர். ஆர்வமுள்ள கைதிகளுக்கு வாரந்தோறும் கதை, கட்டுரை எழுதுவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளித்தனர். கைதிகள் எழுதியதை சீர்ப்படுத்தி மெருகூட்டினர்.

'இப்படி பயிற்சி கொடுத்து அதிக கைதிகளை எழுத்தாளராக மாற்றியது இந்தியாவிலேயே கடலுார் சிறையில் மட்டும்தான் என நினைக்கிறேன்' என பெருமிதம் கொள்ளும் இறையன்பு ஐ.ஏ.எஸ்., 'கைதிகள் மனஅழுத்தத்தை போக்கவே இந்த முயற்சி. எழுதுவதன் மூலம்தான் கவலைகளை போக்க முடியும். எழுதுவது நாம் சமூகத்திடம் பேசுவது போன்றது' என்கிறார்.

கைதிகளை எழுத்தாளராக மாற்றியதில் கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரின் பங்கு அதிகம். சமூக மேம்பாட்டு நிதியை கைதிகளுக்காக ஒதுக்கி கொடுத்திருக்கும் அவர், 'கைதிகள் வெளியே செல்லும்போது மதிக்கக்கூடிய நபராக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. சிறை டி.ஐ.ஜி., சண்முகசுந்தரம், கண்காணிப்பாளர் பரசுராமின் முயற்சியும் பாராட்டத்தக்கது' என்கிறார்.

'பூவுக்குள் பூகம்பம் என்பது போல் கைதிக்குள்ளேயும் ஒரு எழுத்தாளன் இருப்பதை எப்படி உணர்ந்தீர்கள்' என கைதிகளிடம் கேட்டபோது, கைதி கோமல்ராஜ் ''எனக்கு எழுத ஆசை இருந்தது. ஆனால் அதை எப்படி ஆரம்பிக்க வேண்டும் எனத்தெரியவில்லை. யாரும் வழிகாட்டவும் இல்லை. எழுதுக இயக்க ஆசிரியை லாவண்யா வழிகாட்டினார். இன்று நானும் ஒரு எழுத்தாளன் என்பதில் பெருமை கொள்கிறேன்'' என்றார்.

கைதி இப்ராகிம் ''ஈன்றெடுத்த குழந்தையை தாய் முதன்முதலாக பார்க்கும்போது எப்படி மகிழ்ச்சி அடைவாரோ, அந்த மகிழ்ச்சி நான் எழுதிய முதல் நுால் வெளிவந்த போது ஏற்பட்டது. ஒரு கருவை வைத்து எப்படி எழுத வேண்டும் என எழுதுக இயக்கத்தின் கிள்ளிவளவன் வழிகாட்டினார். நுாலில் நாம் கூறும் அறிவுரைகளை அந்நுால் ஆசிரியர் முதலில் பின்பற்ற வேண்டும். நானும் பின்பற்றுவேன்'' என்றார்.

கைதி சுந்தரராஜ், 'இது வாய்ப்பு இல்லை. எதிர்கால வாழ்க்கை. குற்றவாளியாக உள்ளே வந்தேன். என் குடும்பம் அவ்வளவு வேதனைப்பட்டது. இன்று எழுத்தாளனாக மாறி இருக்கிறேன். என் குடும்பத்தினரின் முகத்தில் சந்தோஷத்தை பார்க்கிறேன்' என்றார்.

கண்காணிப்பாளர் பரசுராம் (தற்போது மதுரை சிறையில் பணிபுரிகிறார்) கூறுகையில், ''கைதிகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும், நல்வழிப்படுத்தவும் 'சிறைக்குள் முளைத்த சிறகுகள்' என்ற திட்டத்தின் பலன்தான் இது. இன்னும் பல எழுத்தாளர்கள் உருவாகுவார்கள்'' என்று நம்பிக்கை விதையை விதைத்தார்.

கடலுார் சிறை போன்று மதுரை சிறையிலும் 50 எழுத்தாளர்கள் உருவாகி உள்ளனர். இப்படி ஒவ்வொரு சிறைச்சாலையும் தண்டனை கொடுக்கும் இடமாக மட்டும் இல்லாமல் அறிவூட்டும் சாலையாக மாறினால் கைதிகளின் பார்வையும், அவர்களை பார்ப்பவர்களின் பார்வையும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us