PUBLISHED ON : ஜூலை 18, 2026

கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது, டனாகில் பள்ளத்தாக்கு. கடல் மட்டத்தை விட, 125 மீட்டர் தாழ்வாக இருக்கிறது. இங்குள்ள டல்லோல் கிராமமே, உலகில் வெப்பமான வசிப்பிட பகுதியாக கருதப்படுகிறது. இங்கு ஆண்டு சராசரி வெப்பநிலை, 34.6 டிகிரி செல்ஷியஸ். சில நாட்களில் பகல் வெப்பம், 50 டிகிரியை எட்டுகிறது; இரவு வெப்பம், 42 டிகிரி செல்ஷியசாக இருக்கும்.
மேற்கில் எத்தியோப்பிய மேட்டு நிலமும், கிழக்கில் டனாகில் மலைத் தொடரும் இதன் எல்லையாக உள்ளன. மலைத்தொடரை தாண்டி செங்கடல் அமைந்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் கடல் மட்டத்திலிருந்து மிகத் தாழ்வாக அமைந்த மூன்றாவது பகுதியாக உள்ளது.
இங்கு வசிக்கும், அபார் இன மக்களுக்கு ஒரே ஒரு தொழில் தான் உள்ளது. இந்த பகுதியில் படிந்துள்ள உப்பை வெட்டி, ஒட்டகங்கள் மீது ஏற்றி அருகில் உள்ள நகரங்களில் விற்பனை செய்வர். ஒரு ஒட்டகம், 150 கிலோ வரை உப்பை சுமக்கும் திறன் கொண்டது. ஒரு நாள் பயணத்தில், அண்டை நகரில் விற்பனை செய்து திரும்புவர். இந்த பாதையில் உப்பு எடுத்து செல்வது, உலகில் மிக கடின வேலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த பள்ளத்தாக்கில், 'எர்டா அலே' என்ற எரிமலை எப்போதும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இப்பகுதி, பச்சை நிற அமில ஏரிகள், மஞ்சள் கந்தகக் கற்கள், சிவப்பு இரும்புச் சத்து படிவம், வெள்ளை உப்புப் படுகை என, பல வண்ணங்களின் கலவையாக உள்ளது.
இங்கு வீசும் காற்றில் ஹைட்ரஜன் சல்பைடு, கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் வாயுக்கள் நிறைந்துள்ளன. முகக்கவசம் இன்றி நுழைந்தால், சில நிமிடங்களில் மயக்கம் ஏற்பட்டு விடும்.
இப்பகுதியில் நீர்நிலை இல்லாததால், வாரம் ஒருமுறை குடிநீரை, 'டிரக்'குகளில் கொண்டு வருகின்றனர். அபார் இன மக்களின் உடல், அந்தக் கொடும் வெப்பத்துக்கு ஏற்றாற்போல உள்ளது. அதிகாலை, 4:00 மணிக்கே எழுந்து உப்பு வெட்டி, பகல், 12:00 மணிக்குள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறி, மாலை திரும்புவது இங்கு வாழும் மக்களின் அன்றாட பணியாக உள்ளது.
இங்கு சுற்றுலா பயணியர், 2 மணி நேரத்திற்கு மேல் தங்க முடியாது. எவ்வளவு கடினமான சூழலிலும் உயிர் வாழ முடியும் என்பதை, உலகுக்கு உணர்த்தி வருகின்றனர், டல்லோல் கிராமத்தில் வசிக்கும் அபார் இன மக்கள். உலகின் ஆபத்தான வசிப்பிட பகுதியாக இது கருதப்படுகிறது.
- நர்மதா விஜயன்
