PUBLISHED ON : அக் 03, 2026

அக்., 5 - உலக ஆசிரியர் தினம்
உலக அளவில் ஆசிரியர்களை போற்றும் வகையில், அக்., 5ல், உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
இதை தனித்துவமுடன் சுவாரசியமாக பல நாடுகளும் கொண்டாடுகின்றன. நாடுகளில் பல்வேறு தேதிகளில் நடக்கும் ஆசிரியர் தின கொண்டாட்டங்கள் பற்றி பார்ப்போம்...
ஐக்கிய அரபு அமீரகம்: மேற்காசிய நாடான இங்கு ஆசிரியர் தினம் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. மாணவ, மாணவியர் பாரம்பரிய உடையணிந்து வந்து ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவர். மாணவர்கள் 'கந்துாரா' என்ற உடையும், மாணவியர், 'அபாயா' என்ற உடை அணிந்து, கலாசார முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவர். ஆசிரியர்களுக்காக விளையாட்டு, சிறப்பு விருந்து உட்பட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மலர் கொத்துகள், பரிசு கூடைகள் வழங்கப்படுகின்றன. இது, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணியை பாராட்டும் விதமாக அமைகிறது.
வியட்நாம்: தென் கிழக்காசிய நாடான இங்கு, நவ., 20ம் தேதி, ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்களின் வீடுகளுக்கு சென்று பூங்கொத்து, பரிசுகள் வழங்கி மரியாதை செலுத்துகின்றனர், மாணவ, மாணவியர். பள்ளிகளில் உணவு தயாரித்து, கலைப்படைப்புகளை உருவாக்கி, விருந்து அளிக்கின்றனர். முன்னாள் மாணவர்களும், ஆசிரியர்களை சந்தித்து, நன்றி தெரிவிப்பர்; இது, ஆசிரியர்- - மாணவர் பிணைப்பை வலுப்படுத்துகிறது.
தாய்லாந்து: தென் கிழக்காசிய நாடான இங்கு, ஜன., 16ம் தேதி ஆசிரியர் தினம் 'வான் க்ரூ' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அன்று பள்ளிகளுக்கு விடுமுறை. ஆசிரியர்களுக்கு மலர்கள் வழங்கி, மரியாதை செலுத்தும் நிகழ்வில் பங்கேற்பர், மாணவர்கள். மத நிகழ்வுகள், ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் சடங்குகள் நடைபெறுகின்றன.
இந்தியா: நம் நாட்டில் செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஒட்டி அவரைப் போற்றும் வகையில் அமைகிறது. ஆசிரியர்களைப் போல உடையணிந்து, வகுப்புகளை நடத்தி, பங்கேற்பதன் வழியாக மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றனர், மாணவர்கள்.
பள்ளிகளில் பூங்கொத்து, பரிசு பொருட்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் ஆசிரியர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். இந்த கொண்டாட்டம், ஆசிரியர்களின் மதிப்பை உயர்த்துகிறது. ஆசிரியர் - மாணவர் உறவையும் வலுப்படுத்துகிறது.
-மு.நாவம்மா
