
பழங்காலத்தில் மரப்பட்டையை உடைத்து, உரித்து ஆடையாக்கி உடுத்தினர் மக்கள். மரத்தில் உரித்ததால், 'மரவுரி' என அழைக்கப்பட்டது. அந்த அடிப்படையில், 'உடைத்தல்' என்ற வினையில் இருந்து, 'உடை' என்ற பெயர் உருவானதாக கூறப்படுகிறது. இலை, தழை, பட்டை போல எதை உடுத்தினாலும் அதன் பெயர் உடை தான்; ஆடை என்று அழைக்கலாகாது.
தறியில் நெய்த துணியில் தைக்கப்பட்டது ஆடை. இது மரவுரியை விட பன்மடங்கு நேர்த்தியானது. நாகரிக உலகில் பயனுள்ள ஒரு பொருள். உடுத்துதல், உடுப்பது என்ற செயலின் மூலமாக உள்ளது உடை. அது, உடலை அடைத்து வைப்பதால், ஆடை எனவும் கொள்ளலாம்.
தமிழ் மொழியில் ஆடையை குறிக்க சட்டை, சொக்காய் போன்ற சொற்கள் பிற்காலத்தில் வழக்கத்தில் வந்தன. அதற்கு முன்பே, அரணம், உடுக்கை, கஞ்சுகம், காழகம், சிதவல், தோக்கை, துகில், நேத்திரம், புட்டகம் போன்ற சொற்கள் ஆடையை குறிக்க தமிழில் உள்ளன.
மெய் என்பது உடல். அதற்கு பை போல சட்டை இருப்பதால், 'மெய்ப்பை' என்ற பெயரும் ஆடைக்கு உண்டு.
ஒரு மொழியில் ஒரே பொருளை குறிக்க பல சொற்கள் இருந்தால், மக்களிடம் அது அதிகம் புழங்கியதாக அர்த்தம் கொள்ளலாம்.
ஆண் மேலே அணியும் ஆடைக்கு சீரை என்ற சொல் இருக்கிறது. பாரதியார் பாடிய கவிதைகளில் இந்த சொல்லை சீராக பயன்படுத்தியதை காணலாம். ஆக, ஆடை அணிதல் என்பது சமூக உயர்வின் அடையாளம். வளர்ச்சியடைந்த சமூகத்தில் பண்பாட்டு குறியீடாக உள்ளது.
- ரூபன்