தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வண்ண நீர்நிலைகள்!

வண்ண நீர்நிலைகள்!

வண்ண நீர்நிலைகள்!


PUBLISHED ON : ஜூலை 11, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 11, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவியியல் மாற்றம், தாதுப் பொருட்களின் சேர்க்கை, நுண்ணுயிர் செயற்பாடுகள் இணைந்து உலகில் சில ஏரி, நதிகளை, இயற்கை வண்ணமய ஓவியங்களாக மாற்றியுள்ளன. அறிவியல் காரணங்களால் உருவான அந்த அதிசயங்கள் குறித்து பார்ப்போம்...

தென் அமெரிக்க நாடான, பொலிவியாவின், தென்மேற்கு பகுதியில், ஆண்டிஸ் மலைத் தொடர் உள்ளது. இதன் அருகில், லகுனா கொலராடா ஏரி, சிவப்பு நிறத் தோற்றத்தால் பிரபலமானது. இது கடல் மட்டத்தில் இருந்து 4,278 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. நீரில் வளரும் பாசிகள், தாதுப் பொருட்களின் தாக்கத்தால், இந்த ஏரி சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. இங்கு, பல்லாயிரம் பிளமிங்கோ பறவைகள் கூடுகட்டி வாழ்கின்றன.

ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது, ஹில்லியர் ஏரி. இங்குள்ள நீர் தனித்துவமான இளஞ்சிவப்பு நிறத்தால், உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது, 37 ஏக்கர் பரப்புடையது. அதிக உப்புத்தன்மை மற்றும் சில நுண்ணுயிர்களின் செயலால் இளஞ்சிவப்பு நிறம் உருவாகிறது என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தென் அமெரிக்க நாடான, கொலம்பியாவில் பாய்கிறது, கானோ கிறிஸ்டல்ஸ் நதி. இது, ஐந்து வண்ண நதி என்று அழைக்கப்படுகிறது. ஆண்டின் குறிப்பிட்ட சில மாதங்களில், இந்த நதியின் நீருக்கடியில் வளரும் தாவர இனங்கள் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், கருப்பு நிறங்களை உருவாக்குகின்றன. அந்த நேரங்களில், வானவில் போலத் தோற்றமளிக்கிறது, இந்த நதி.

தென் அமெரிக்காவில் பாய்ந்தோடும், அமேசான் ஆற்றின் முக்கிய கிளை ஆறு, ரியோ நீக்ரோ. இதன் நீர் கருப்பு நிறமாக உள்ளது. நீரில் கரைந்துள்ள கரிமப் பொருட்களின் காரணமாக, இந்த நிறம் உருவாகிறது.

கிழக்காசிய நாடான ஜப்பான், ஜாவோ மலைப்பகுதியில் உள்ளது, ஒகாமா க்ரேட்டர் ஏரி. எரிமலை வெடிப்பால் உருவானது. நீரில் உள்ள தாதுப் பொருட்கள் மற்றும் ஒளி மாற்றங்கள் காரணமாக, இதன் நிறம் மாறிக் கொண்டே இருக்கும் .

அறிவியல் அற்புதங்களை வெளிப்படுத்தும், இந்த வண்ணமய நீர்நிலைகள், பூமியின் பல்வகை தன்மையை ஆராயும் ஆர்வத்தை விஞ்ஞானிகளுக்கு ஊட்டுகின்றன.

- வ.முருகன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us