PUBLISHED ON : பிப் 07, 2026

சுதந்திரத்திற்கு முன், நம் நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில், பிரிட்டீஷ் மன்னரின் படம் இடம் பெற்றிருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பின், ரூபாய் நோட்டுகளில் அவரின் படம் மாற்றப்பட்டது. மவுரிய பேரரசர் அசோகரால், கி.மு., 250-ல், சாரநாத்தில் நிறுவப்பட்ட கல்துாணின் உச்சியில் உள்ள நான்கு சிங்கங்களின் வடிவம், தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. அதுவே, ரூபாய் நோட்டிலும் பயன்படுத்தப்பட்டது.
முதல் முறையாக, 1949ல் வெளியிடப்பட்ட, ஒரு ரூபாய் நோட்டில், அசோகத்துாண் படம் பயன்படுத்தப்பட்டது. பின், 1954ல், 1,000 ரூபாய், 5,000 ரூபாய் மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
இதில், 1,000 ரூபாய் நோட்டில், தஞ்சை பெரியகோவில் கோபுரத்தின் படம் இடம் பெற்றது. மும்பையின் வரலாற்று சின்னமாக உள்ள, 'கேட்வே ஆப் இந்தியா' படம், 5,000 ரூபாய் நோட்டிலும்; நான்கு சிங்கங்களின் முகம், 10,000 ரூபாய் நோட்டிலும் இடம் பெற்றன.
தேசப்பிதா காந்தியின் மறைவுக்கு பின், ரூபாய் நோட்டுகளில் அவர் படத்தை பயன்படுத்த திட்டமிடப் பட்டது. அவரது நுாற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்த, 1969ம் ஆண்டில் தான், முதல் முறையாக காந்தியின் படம், ரூபாய் நோட்டில் இடம் பெற்றது.
ஆரம்பத்தில், 100 ரூபாய் நோட்டில் மட்டும் தான் காந்தியின் படம் இடம் பெற்றது.
காந்தியின் படம் மட்டுமின்றி, வேறு படங்களும் ரூபாய் நோட்டில் இடம் பிடித்தன. விஞ்ஞானி ஆரியபட்டா, வேளாண் உபகரணங்கள், இந்திய கலை வடிவங்கள், கோனார்க் சக்கரம், மயில் போன்றவற்றின் படங்களும், ரூபாய் நோட்டில் இடம் பெற்றன.
இந்த நிலையில், 1978ல், உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து, மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் பின், 1980ல், புதிய வகை ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றில், புன்னகைக்கும் காந்தியின் படம் இடம் பிடித்தது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த, அரசியல் தலைவர் லார்டு பிரெட்ரிக் லாரன்ஸ் என்பவர், 1946ல், டில்லியில் உள்ள தற்போதைய ஜனாதிபதி மாளிகையில், காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது, காந்தியின் பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அவற்றில் ஒரு படத்திலிருந்து தான், ரூபாய் நோட்டுக்கான காந்தியின் புன்னகைக்கும் முகத்தின் படம் தேர்ந்தெடுக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து, அனைத்து ரூபாய் நோட்டுகளிலும், காந்தியின் புன்னகை முகம் தான் பயன்படுத்தப்படுகிறது.
நம் நாட்டில், 1996ல், 'மகாத்மா காந்தி வரிசை' ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ரூபாய் நோட்டுகளில், புன்னகைக்கும் காந்தியின் நீரெழுத்து ஓவியம் இடம் பெற்றது. அத்துடன், பார்வையற்றவர்களுக்கு ஏதுவான சில அம்சங்களும் சேர்க்கப்பட்டன.
- வி.பரணிதா

