PUBLISHED ON : ஜன 17, 2026

உலகிலேயே மிக அதிகமான பெண் விமானிகளைக் கொண்ட நாடு, இந்தியா.
கடந்த, 2023ல் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் படி, உலகளவில் உள்ள விமானிகளில் பெண்களின் பங்கு, 5 - 7 சதவீதம் மட்டுமே. ஆனால், இந்தியாவில் இது, 15 சதவீதமாக உள்ளது.
இந்திய விமான நிறுவனங்களான, 'இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா' போன்றவற்றில், 1,500க்கும் மேற்பட்ட பெண் விமானிகள் பணியாற்றுகின்றனர்.
இந்த சாதனைக்கு வித்திட்டவர், இந்தியாவின் முதல் பெண் விமானியான, சரளா தாக்ரல். அவரது முன்னோடி முயற்சிகள், இன்று ஆயிரக்கணக்கான பெண்களை, விமான போக்குவரத்து துறையில் சிறந்து விளங்க வைத்துள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில், 1914ம் ஆண்டு பிறந்த சரளா, 1936ல், தன் 21 வயதில், லாகூர் விமானப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, தனி விமானம் ஓட்டி, 'ஏ' உரிமம் பெற்றார். அவரது கணவர், பி.டி.ஷர்மாவும் விமானி தான். சரளா, ஒரு குழந்தையின் தாயாக இருந்த போதும், அவருக்கு பி.டி.ஷர்மா மிகப்பெரிய ஊக்கமாக இருந்தார்.
சரளா, 1937ல் வணிக விமான உரிமம் பெற்று, இந்தியாவின் முதல் பெண் வணிக விமானியானார்.
ஆணாதிக்கத்தை உடைக்கும் வகையில் சேலை அணிந்து, விமானம் இயக்கினார்.
சரளாவின் தைரியமும், உறுதியும், அப்போதைய ஆணாதிக்க சமூகத்தில், பெண்களுக்கு புதிய பாதைகளைத் திறந்தன. இன்று, இந்திய பெண் விமானிகள், உலக அரங்கில் புகழ் பெற்றுள்ளனர். கேப்டன் ஜோயா அகர்வால் போன்றவர்கள், 'போயிங் 777' ரகத்தை சேர்ந்த பெரிய விமானங்களை இயக்கி, சாதனை படைத்துள்ளனர்.
இந்தியாவின் இந்த பெருமை, பாலின சமத்துவத்திற்கு முன்மாதிரியாகவும், பெண்களின் திறனை உலகுக்கு உணர்த்தும் ஒளிவிளக்காகவும் திகழ்கிறது.
--மு.நாவம்மா

