/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
தபாலில் குழந்தையை அனுப்பிய பெற்றோர்!
/
தபாலில் குழந்தையை அனுப்பிய பெற்றோர்!
PUBLISHED ON : செப் 27, 2025

தபால் மற்றும் கொரியரில் பொருட்களை அனுப்பும் வசதி இப்போது தாராளமாகிவிட்டது. எந்த பொருளையும் உலகின் எந்த மூலைக்கும் அனுப்பலாம். அந்த அளவு போக்குவரத்து வசதி பெருகியுள்ளது. இதிலும் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஆனால், தபால் சேவை துவங்கிய காலத்தில் குழந்தைகளை பார்சலில் அனுப்பும் வசதி அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த விபரம் தெரியவந்துள்ளது.
அமெரிக்க தபால்துறை, 1913ல் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், 'தேனீ, பூச்சி தவிர பிற உயிரினங்களை தபாலில் அனுப்பும் சேவை வழங்கப்படும்' என குறிப்பிட்டு இருந்தது. இந்த சேவையை பயன்படுத்தி, முட்டை, கோழி குஞ்சு என, பலவிதமாக பார்சல் அனுப்ப துவங்கினர் அமெரிக்கர்கள். சில நாட்களிலேயே குழந்தையையும் பார்சலில் அனுப்ப துவங்கி விட்டனர்.
அந்த காலத்தில் ரயிலில் பயண கட்டணம் மிகவும் அதிகம். எனவே, குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்ட தபால் சேவையை இதற்கு பயன்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சேவையை நம்பிக்கை தரும் வகையில் நிறைவேற்றியுள்ளது அமெரிக்க தபால் துறை.
அமெரிக்கா, ஓஹியோ பகுதியில் வசித்த தம்பதியர் தங்கள் குழந்தையை, சற்று தொலைவில் இருந்த பாட்டி வீட்டுக்கு பார்சலில் முதலில் அனுப்பியுள்ளனர். வெர்னான் என்ற தபால்காரர் பத்திரமாக உரியவரிடம் குழந்தையை சேர்த்துள்ளார். இதற்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பலரும் இதுபோல் குழந்தையை தபாலில் அனுப்பியுள்ளனர்.
அமெரிக்கா, புளோரிடா, பென்சகோலா பகுதியில் இருந்து, 6 வயது சிறுமி எட்னா நெப் என்பவரை, மார்ச் 27, 1915ல் 1,100 கி.மீ., துாரத்தில் உள்ள வர்ஜீனியா, கிறிஸ்டியன்ஸ்பர்க் பகுதிக்கு தபாலில் அனுப்பியுள்ளனர். அங்கு அவரது தந்தையிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டாள். இந்த சிறுமியே தபால் பார்சல் வழியாக உலகில் மிக நீண்ட துாரம் பயணித்ததாக கூறப்படுகிறது.
பின், 1920ல், தபாலில் குழந்தைகளை அனுப்பும் முறை ரத்து செய்யப்பட்டு, அந்த சேவை முடிவுக்கு வந்தது.
- கா.லட்சுமி