
இஸ்ரேல் நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ளது, நாசரேத் என்னும் ஊர். இங்கு வசித்த புனித அன்னாள் மற்றும் யோவாக்கிம் ஆகியோருக்கு பிறந்த மகள், மரியாள். இவரை, மேரி என்பர். இவருக்கும், சூசையப்பர் என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது.
அந்த சமயத்தில் பரிசுத்த ஆவியின் மூலம் மரியாள் கர்ப்பமானார். இறைமகன் உலகத்தை உய்விக்க வருகிறார் என்ற தகவல், சூசையப்பருக்கும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, அந்த நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டது. அக்காலத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக, அவரவர் சொந்த ஊருக்கு, மக்கள் சென்றுவிட வேண்டும் என்ற விதி இருந்தது.
அதன்படி மரியாளும், சூசையப்பரும் தங்கள் ஊரான, பெத்லகேம் சென்றனர். அங்குள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தில் தங்கினர். இந்த எளிமையான இடத்தில் தான் ஏசு கிறிஸ்து அவதரித்தார்.
ஏசுவின் பிறந்தநாள், கிறிஸ்துமஸ் நாளாக கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் துவங்குவதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே, குழந்தைகளை மகிழ்விக்க கிறிஸ்துமஸ் தாத்தா வீடுகளுக்கு திடீரென வருவார்; பரிசுகளை வழங்குவார்.
யார் அந்த கிறிஸ்துமஸ் தாத்தா என்பது தெரியுமா...
வட ஐரோப்பாவில் உள்ள பின்லாந்து நாட்டில் வசித்த ஒரு ஏழைக்கு, மூன்று மகள்கள் இருந்தனர். மூவருக்கும் திருமண வயது நெருங்கியது. ஆனால், அந்த ஏழை தந்தையால், திருமணத்துக்கு பணத்தை புரட்ட முடியவில்லை. இதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் அதிகாலை, அந்த வீட்டின் மூத்த பெண், வாசல் கதவை திறந்தாள். வாசலில் ஒரு சிறிய பை இருந்தது. அதில், தங்கக் கட்டிகள் இருந்தன. இறைவனின் கருணையால், அந்த தங்கம் கிடைத்ததாக கருதினாள்.
தன் தந்தையிடம் அந்த பையை ஒப்படைத்தாள். அவரும் மகிழ்ந்து, அந்த பெண்ணுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தார்.
இரண்டாவது பெண்ணுக்கும், இதே போல வாசலில் பை இருக்க, அவளது திருமணமும் சிரமம் இன்றி முடிந்தது.
மூன்றாவது பெண்ணும், இதே போல தனக்கும் பை வரும் என காத்திருந்தாள்.
இருந்தாலும், பையை வைத்துச் செல்வது யார் என தெரிந்து கொள்ள, அவள் மனதில் ஆசை. அதை கவனிப்பதற்காக, தினமும் அதிகாலை வேளையில் வீட்டு கதவை திறந்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தாள்.
எதிர்பார்த்தது போலவே, ஒரு நாள், ஒரு முதியவர், அதிகாலை வேளையில் ஒரு பையை வாசலில் வைத்து சென்றார். இதை பார்த்த அந்த பெண், தன் தந்தையிடம் சொல்ல, அவர் அந்த முதியவரை தடுத்து நிறுத்தி விசாரித்தார்.
முதியவரின் பெயர், புனித நிக்கோலஸ் என தெரிய வந்தது. எந்தெந்த வீடுகளில் கஷ்டம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் உதவி செய்வது அவரது வழக்கம்.
புனித நிக்கோலசுக்கு குழந்தைகள் என்றால் உயிர். கிறிஸ்துமஸ் துவங்குவதற்கு முன் குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தவர், அவர்.
புனித நிக்கோலஸ் என்ற அவரது பெயர், காலப்போக்கில் 'சாண்டாகிளாஸ்' என மாறியது. கி.பி., 300ம் ஆண்டில், இவர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
- தி.செல்லப்பா

