
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, ஷத்திரிய நாடார் உயர்நிலைப் பள்ளியில், 1975ல், 11ம் வகுப்பு படித்தேன். என் தலைமை ஆசிரியை கோமதி, மிகவும் கண்டிப்பானவர். அவர் தான் எங்களுக்கு, ஆங்கிலம், வரலாறு மற்றும் புவியியல் பாடங்களையும் நடத்தினார். அனைத்து மாணவியரையும் தேர்ச்சி அடையச் செய்ய, இரவு நேரங்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துவார்.
ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும், அருகில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு, மாணவியரை அழைத்துச் சென்று, வார வழிபாடு நடத்துவார். தேவாரம், திருவாசகம், சிவபுராணப் பாடல்களை, சிறு புத்தகங்களாக மாணவியருக்கு வழங்கி, அதை முறையாகப் பாடச் சொல்லி தருவார். அப்போது மனப்பாடம் செய்த பாடல்கள், என் மனதில் ஆழப்பதிந்தது. மாணவியருக்கு ஆன்மிக சிந்தனைகளையும் போதித்தார்.
தற்போது, எனக்கு வயது, 67. அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியையாக இருந்து, பணி ஓய்வு பெற்றேன். பக்தி பாடல்கள் பாடும் போதெல்லாம், 'குடும்பத்தில் பெண் பிள்ளைகள் ஆன்மிகச் சிந்தனையுடன் வளர வேண்டும்' என வழிகாட்டிய தலைமையாசிரியை கோமதியை, நினைவில் கொண்டு வணங்குகிறேன்.
- மு.பிரேமா, ராமநாதபுரம்.தொடர்புக்கு: 90034 11940

