PUBLISHED ON : அக் 24, 2026

உ லகின் தனித்துவமான கட்டடங்களில் ஒன்றாக விளங்குகிறது, பெரிய கூடை வீடு. அமெரிக்கா, ஓஹியோ, நெவார்க் பகுதியில் அமைந்துள்ளது. இது, 1 லட்சத்து 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ளது.
புகழ் பெற்ற கூடை தயாரிப்பு நிறுவனமான லாங்கபெர்கரின் தலைமை அலுவலகம் இங்கு இயங்கியது. ஏழு மாடிகள் உடைய இந்த கட்டடம் கட்டும் பணி, 1990ல் துவங்கி, 1997ல் முடிந்தது.
இந்த கட்டடத்தில் கூடையில் இருப்பது போன்ற கைப்பிடிகள், ஒவ்வொன்றும், 1 லட்சத்து 50 ஆயிரம் கிலோ எடையுள்ளவை. குளிர்காலத்தில் பனி உறைந்து கண்ணாடி கூரையில் விழாமல் இருக்க, இந்த கைப்பிடி அமைப்பில், 'ஹீட்டர்' பொருத்தப்பட்டுள்ளது.
கட்டடத்தின் மையப்பகுதியில், 30 ஆயிரம் சதுர அடி பரப்பில் திறந்தவெளி அரங்கம் உள்ளது. இதன் மேலே உள்ள கண்ணாடி கூரை வழியாக, சூரிய ஒளி நேரடியாக உள்ளே வரும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. இதில், 500-க்கு ம் மேற்பட்ட ஊழியர்கள் அமர்ந்து பணியாற்றும் வசதி செய்யப்பட்டுள்ளது. திரைப்பட அரங்கம், உடற்பயிற்சி கூடம் மற்றும் குழந்தைகள் காப்பகம் போன்ற நவீன வசதிகளும் உள்ளன.
கூடை போலவே, இந்த கட்டடமும் கீழிருந்து மேல்நோக்கி செல்லச் செல்ல அகலமாக உள்ளது. இதனால் முதல் மாடியை விட, 7ம் மாடி, 5,000 சதுர அடி கூடுதல் பரப்பை கொண்டுள்ளது. நிதி நெருக்கடியால் லாங்கபெர்கர் நிறுவனம், இந்த கட்டடத்தில் இயங்கிய அலுவலகத்தை 2016-ல் காலி செய்தது. தொடர்ந்து இதை, சொகுசு ஹோட்டலாக மாற்ற முயற்சி நடந்தது. அது நிறைவேறவில்லை.
இந்த கட்டடத்தை வாங்க முன்வருவோர், வரலாற்றுச் சிறப்புமிக்க கூடை வடிவம், அதன் கைப்பிடிகளை மாற்றக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கட்டடம் சுற்றுலா பயணியரை ஈர்த்துள்ளது.
