
கோவை மாவட்டம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம், துங்காவி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், 1969ல், 8ம் வகுப்பு படித்தபோது நடந்த நிகழ்வு...
அப்போது, எங்களுக்கு தமிழ் ஆசிரியராக இருந்தவர், வே.ராமசாமி. அவருடைய கையெழுத்து கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படி அழகாக இருக்கும். வகுப்பில் மூன்று சிறுமியர் உட்பட, 12 பேர் இருந்தோம்.
வகுப்பு மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களை பார்த்த ஆசிரியர் மிகவும் நொந்து போனார். அனைத்து மாணவர்களின் கையெழுத்தும், கோழி கிண்டியது போல இருந்தது. என்னுடைய கையெழுத்து, கொஞ்சம் சுமார் ரகம்.
மாணவர்களுக்கு முதல்படியாக, அழகான கையெழுத்து முக்கியம் என்பதை வலியுறுத்தினார், தமிழாசிரியர் ராமசாமி. இரண்டு கோடு போட்ட நோட்டுப் புத்தகங்களை, அனைத்து மாணவர்களுக்கும் அவரே வாங்கிக் கொடுத்து, எப்படி அழகாக எழுத வேண்டும் என, எழுதிக் காண்பித்து, தினமும் பயிற்சியும் அளித்தார்.
அதில், நான் அழகாக தமிழில் எழுதப் பழகினேன். என் கையெழுத்து, மல்லிகை மொட்டு கோர்த்தது போல, அழகாக, சீராக, வரிசையாக மாறியது.
அடுத்த ஆண்டு, உடுமலைப்பேட்டை, ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். அங்கிருந்த தமிழாசிரியர் ராமகிருஷ்ணன், என் தமிழ் கட்டுரை நோட்டைப் பார்த்து, கையெழுத்து அழகாக உள்ளதென பாராட்டியது, இன்றும் நினைவில் உள்ளது.
என் தமிழ் கையெழுத்து, போட்டித் தேர்வில் கூடுதல் மதிப்பெண்ணை பெற்றுத் தந்து, என் தலையெழுத்தை மாற்றியது. அரசு பணியில், தணிக்கை துறையில் நான் சமர்ப்பிக்கும் அறிக்கையில், என்னுடைய கையெழுத்தை உயர் அதிகாரிகள் பாராட்டி, 'தட்டச்சு செய்ததுபோல் உள்ளது' எனக் கூறும்போது, எனக்கு பெருமையாக இருந்தது.
தற்போது, எனக்கு வயது, 73. பணி நிறைவு பெற்ற பிறகும், தமிழில் என் அழகிய கையெழுத்துப் பயணம் தொடர்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்து வழிகாட்டிய, என் தமிழ் ஆசிரியர் வே.ராமசாமியை இன்றும் நினைவில் கொண்டு, வணங்குகிறேன்.
- ஆ.மாணிக்கம், கோவை. தொடர்புக்கு: 94436 56131

