PUBLISHED ON : ஜூன் 06, 2026

வடக்கு ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் உள்ள மராகேஷ் நகரத்தின் பழமையான பகுதி மெடினா. இங்குள்ள பாஹியா அரண்மனை, 19ம் நுாற்றாண்டின் அற்புத கட்டடக்கலையின் சின்னமாக திகழ்கிறது. பாஹியா என்ற அரபு மொழி சொல்லுக்கு, பிரகாசம், அழகு என பொருள். உலக சுற்றுலாப் பயணியரை ஈர்க்கும் வரலாற்று நினைவு சின்னமாக இப்போது உள்ளது.
இந்த அரண்மனை கட்டுமானப் பணி, சி மூசா என்பவரால், கி.பி.1860ல் துவங்கப்பட்டது. இவர் அடிமையாக இருந்து, அமைச்சராக உயர்ந்தவர்.
முதலில், 5 ஏக்கர் பரப்பில், 150 அறைகளுடன் கட்டப்பட்டது. பின், அவரது மகன் பா அகமது என்பவரால் விரிவுபடுத்தப்பட்டது.
மொராக்கோ கட்டடக்கலையின் சின்னமாக திகழ்கிறது. மரச்செதுக்கல், வண்ணமய மொசைக் ஓடு, பளிங்குத்தள அமைப்பு, அரபு எழுத்துகளுடன் கூடிய வடிவமைப்பு ஆகியவை, இதன் அழகை மிளிர செய்கின்றன.
இந்த அரண்மனையை உருவாக்க, நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து, சிறந்த கைவினை கலைஞர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
அரண்மனையை விரிவாக்கிய பா அகமது காலத்துக்கு பின், இங்கிருந்த செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ஐரோப்பிய நாடான பிரான்ஸ் காலனியாக மாறியது மொராக்கோ. அப்போது இந்த அரண்மனை, ஆளுநர் மாளிகையாக மாற்றப்பட்டது.
இன்று உலகின் முக்கிய அருங்காட்சியகங்களில் ஒன்றாக திகழ்கிறது. காலை 9:00 மணி முதல் மாலை 5:00 வரை இதை பார்வையிடலாம்.
பாஹியா அரண்மனை, மொராக்கோ நாட்டின் வளமிக்க கலாசாரத்தையும், அப்போதிருந்த அரசுகளின் ஆடம்பர செயல்பாடுகளையும் பிரதிபலிக்கிறது. வரலாற்று ஆர்வலர்களுக்கும், சுற்றுலா பயணியருக்கும் இப்போது பொக்கிஷமாக திகழ்கிறது.
- மு.நாவம்மா
