
வட அமெரிக்கா மற்றும் அலாஸ்கா பகுதி காடுகளில் வாழும் தனித்துவ பறவையினம் கறுப்பு மரங்கொத்தி. உடல் கறுப்பு நிறமாக இருக்கும். ஆண் பறவை தலை மஞ்சள் வண்ணப் பட்டையுடன் ஜொலிக்கும். மரங்களில் வாழும் புழு, பூச்சிகளை உணவாகக் கொள்ளும்.
இதன் உணவு முறை சுவாரசியமானது. கறுப்பு மரங்கொத்தி, எரிந்த நிலையில் இருக்கும் காட்டுப்பகுதியில் அதிகமாக பறந்து திரியும். தீயில் கருகும் மரங்களில் இருந்து தப்ப முயலும் பூச்சிகளை பிடித்து உண்ணும். மற்ற மரங்களில் கூர்ந்த அலகால் பட்டையை உரித்து, நீண்ட நாக்கால் பூச்சிகளை வெளியே இழுத்து உண்ணும். இந்த பறவை மரத்தில் துளையிடும் ஒலி, வெகு தொலைவு வரை கேட்கும்.
இதன் இனப்பெருக்கம் மே முதல் ஜூலை வரை நடக்கிறது. ஆண், பெண் பறவைகள் இணைந்து மரக்கிளையில் கூடு கட்ட குழி தோண்டும். பெண் பறவை, இரண்டு முதல் ஆறு முட்டைகள் வரை இடும். இரு பாலினமும் மாறி மாறி அடைகாக்கும். முட்டைகள் பொரிந்து, நான்கு வாரங்களில் குஞ்சுகள் பறக்க துவங்கும்.
இயற்கையை சமநிலையில் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த பறவை. புழு, பூச்சிகளை கட்டுப்படுத்துவதால், காடு ஆரோக்கியமாக வளர உதவுகிறது. இந்த பறவையின எண்ணிக்கை குறைந்துள்ளதால், பாதுகாக்கப்பட வேண்டிய உயிரின பட்டியலில் வைத்துள்ளது சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம். இதன் தனித்துவ வாழ்க்கை முறையும், எரியும் காடுகளுடனான தொடர்பும், இயற்கை ஆர்வலர்களை கவர்ந்துள்ளது.
- விஜயன் செல்வராஜ்