PUBLISHED ON : ஜூலை 04, 2026

திருச்சி, சாவித்திரி வித்யாசாலா பெண்கள் மேல்நிலை பள்ளியில், 1988ல், 10ம் வகுப்பு படித்தேன். உயிரியல் பாடத்தை ஆசிரியை அருணாவும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை ஆசிரியை மீனாட்சியும் சிறப்பாக எடுத்தனர். இனிமையாக கற்பித்த போதும் மிகவும் கண்டிப்பை கடைபிடிப்பர்.
அவர்களது வகுப்பு எப்போது வரும் என, காத்து இருப்பேன். பொது தேர்வுக்கு தயாரான போது, 'தேர்வு அறைக்கு செல்லும் போது, யாரிடமும் பேசக் கூடாது. கடைசி நேரத்தில், முட்டி மோதி படிப்பதை தவிர்க்க வேண்டும்...' என, அறிவுறுத்தி வாழ்த்தினர்.
தேர்வு நெருங்கிய போது, மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டார், என் அம்மா. உடல்நிலை மோசமாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிக்கலான சூழலில் பதற்றத்துடன் தேர்வு எழுத சென்றேன். நம்பிக்கை அளிக்கும் வகையில் அறிவுரைத்து அனுப்பினர், ஆசிரியைகள். முடிவில், அறிவியல், கணித பாடங்களில் முழுமையாக, 100 மதிப்பெண் வாங்கி சாதித்தேன். கட்டியணைத்து பாராட்டினர், ஆசிரியைகள்.
ஆசிரியை அருணாவை, பொது நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் சந்தித்தேன். மிகவும் உற்சாகமுடன், 'என்னோட சென்டம் ஸ்டூடன்ட்...' என, அறிமுகம் செய்தது பெருமையாக இருந்தது. அந்த தருணம், மிகுந்த நெகிழ்ச்சியை தந்தது.
எனக்கு, 53 வயதாகிறது. பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணி செய்தேன். தற்போது, அறிவியல், கணிதம், ஹிந்தி டியூஷன் வகுப்புகள் நடத்தி வருகிறேன். தேர்வுக்கு செல்லும் கடைசி நேரத்தில் முட்டிக்கொண்டு படிக்கும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, சாதிக்க துாண்டிய ஆசிரியைகள், அருணா, மீனாட்சி காட்டிய வழியை பின்பற்றி, மாணவர்களை தயார் செய்து மகிழ்கிறேன்.
- கே.சரண்யா, ஸ்ரீரங்கம். தொடர்புக்கு: 99428 57325
