PUBLISHED ON : மே 30, 2026

புதுக்கோட்டை மாவட்டம், வெட்டன் விடுதி அரசு நடுநிலைப் பள்ளியில், 1988ல், 9ம் வகுப்பு படித்தேன். என் அண்ணன் வேலைக்கு சென்று, என் படிப்புக்கு உதவினார்.
சிறு வயது முதல் தியேட்டரில் சினிமா பார்ப்பதில் மிகவும் விருப்பம் கொண்டிருந்தேன். வகுப்பை, 'கட்' அடித்து, அடிக்கடி சினிமா சென்றதால், வருகை பதிவு குறைந்தது. தேர்வில் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டது.
வகுப்பு ஆசிரியர் ஜி.கந்தசாமி, என் அண்ணனின் நண்பர். என்னிடம், கண்டிப்புடன் நடந்து கொள்வார். எதிர்பார்த்தது போலவே, ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்தேன்.
அதிர்ச்சியில் இருந்த என் அண்ணனை அழைத்து, 'உன் தம்பியை தேர்ச்சி அடைய செய்திருந்தால் தவறான முன்னுதாரணமாக அமைந்திருக்கும். அது அவனது எதிர்காலத்தையே பாழடித்து விடும். அதனால், மீண்டும் இதே வகுப்பில் சேர்ந்து தவறாமல் முயற்சியுடன் படிக்க சொல்...' என, கூறினார். எனக்கும் தக்கவாறு அறிவுரை கூறினார்.
அதை வேத வாக்காக எடுத்து முயன்று படித்தேன். பின், கல்லுாரிப் படிப்பை நிறைவு செய்யும் வரை, எந்த தேர்விலும் தோல்வி அடையவில்லை.
என் வயது, 53. தமிழக சிறப்புக் காவல் படையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறேன். பணியிலும், வாழ்விலும் நேர்மையை கடைப்பிடிக்கிறேன். என் உயர்வுக்கு ஏணியாக இருந்த ஆசிரியர் ஜி.கந்தசாமியை நன்றியுடன், நினைவு கூர்கிறேன்.
- மா.உதயகுமார், சென்னை.
தொடர்புக்கு: 93454 10036
