PUBLISHED ON : நவ 21, 2026

நவ., 27 - தேசிய உடலுறுப்பு தான தினம்
இந்தியாவில், தேசிய உடல் உறுப்பு தான தினமாக, ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 27ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
உயிர் காக்கும், உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் தினமாக, இது உள்ளது. தானம் செய்வோரின் உன்னதப் பங்களிப்பை பாராட்டும் நிகழ்வுகளும் நடத்தப்படுகிறது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு என்ற நோட்டோ, இதை, 2010ம் ஆண்டு முதல் ஒருங்கிணைத்து வருகிறது.
உறுப்பு தானம் என்பது, ஒருவரின் உடலில் இருந்து உறுப்பு, திசுக்களை, அறுவை சிகிச்சையால் எடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மற்றொருவருக்கு பொருத்துவதை குறிக்கிறது. உடலில் உள்ள இதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்ய முடியும்.
உலகளவில் ஐரோப்பிய நாடான ஸ்பெயின், உறுப்பு தானத்தில் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் இதற்கான விழிப்புணர்வு இன்னும் முழுமையாக ஏற்படவில்லை. முழு உடல் தானத்திற்கும், உறுப்பு தானத்திற்கும் உள்ள வேறுபாடு குறித்த தவறான புரிதல் மற்றும் மூடநம்பிக்கைகள், இதற்கு தடையாக உள்ளன. உயிர் பிரிந்தவரின் உடலில் உள்ள உறுப்பு தானமாக எடுத்த பின், உறவினர்களிடம் அந்த உடல் ஒப்படைக்கப்படும் என்பது, பலருக்கு தெரிவதில்லை.
இந்தியாவில் உறுப்பு தானத்தில் முன்னோடியாக திகழ்கிறது தமிழகம். விபத்தில் மூளைச் சாவு அடைந்தோரின் உறுப்புகளை தானமாகப் பெற்று, பலருக்கு புது வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு இளைஞரின் இதயம், கல்லீரல் சென்னையில் இருந்து மதுரைக்கு எடுத்து செல்லப்பட்டு, இரண்டு பேர் உயிரைக் காப்பாற்றிய நிகழ்வுகள் நடந்துள்ளன.
உறுப்பு தான பதிவு மையங்களில் பெயரை பதிவு செய்வது எளிது. உடல் உறுப்பு தானம் தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள, மத்திய அரசின் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 114 770-ல் தொடர்பு கொள்ளலாம்.
தேசிய உடல் உறுப்பு தான தினத்தில், உறுப்பு தான உறுதி மொழி எடுத்து, புது வாழ்வை பரிசளிப்போம்.
- மு.நாவம்மா
