PUBLISHED ON : டிச 13, 2025

சென்னை, சைதாப்பேட்டை, அன்னை வேளாங்கன்னி மெட்ரிகுலேஷன் பள்ளியில், 2000வது ஆண்டில், பிளஸ் 2 படித்தேன். தலைமையாசிரியை டெல்பின் தேவராஜ், எங்களுக்கு அறிவியல் பாடம் எடுத்தார். கண்டிப்பு மிக்கவர். சிறப்பாக பாடம் சொல்லித் தருவார். எளிமையாக புரியவைப்பார். சுமாராக படிப்போரையும் சிறப்பு பயிற்சிகள் தந்து, சிறந்து விளங்கச் செய்தார்.
மாணவர்களுக்கு தோட்டக்கலையிலும் ஆர்வம் ஊட்டினார். பள்ளி தோட்டத்தில் வாழை மரங்கள், கரும்பு, பூச்செடிகள் வளர்க்கும் பயிற்சியை எங்களுக்கு வழங்கினார். பயிர்களின் நடவில் இருந்து அறுவடை வரை போதிப்பார்.
என் வயது, 42. சமீபத்தில் எங்கள் வகுப்பு மாணவர்கள் ஒன்று சேர்ந்து, பள்ளியில் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினோம்.
அதில், பள்ளி தலைமை ஆசிரியை டெல்பின் தேவராஜை கவுரவித்தோம். எங்களுக்கு பள்ளியை அவர் சுற்றிக் காட்டினார். பல விதங்களில் பள்ளி வளர்ச்சியடைந்து இருந்தது. அவரின் முயற்சியால் பள்ளி தோட்டம் அழகாக பராமரிக்கப்பட்டு வருவதை கண்டு மகிழ்ந்தோம். அவரது ஆசியை பெற்று திரும்பினோம்.
தற்போது, என் வீட்டில் வாழைமரம், தென்னை மரம், காய்கறி செடிகள், பூச்செடிகள் வளர்த்து வருகிறேன். என் வீட்டு தோட்டத்தை பார்க்கும் போதெல்லாம், இயற்கையை நேசிக்க கற்றுத்தந்த தலைமை ஆசிரியை டெல்பின் தேவராஜின் முகம் தான் நிழலாடுகிறது. அவரை போற்றி வணங்குகிறேன்.
- பி.பிரசன்னா, சென்னை. தொடர்புக்கு: 98406 90635

