
தேனி மாவட்டம், சின்னமனுார், கருங்கட்டான்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1972ல், 7ம் வகுப்பு படித்தேன்.
கல்வியாண்டின் முடிவில் பள்ளி ஆண்டு விழா நடக்க இருந்தது. கலை நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவ, மாணவியரை தேர்வு செய்தது ஆசிரியர் குழு. நடன குழுவில் என்னையும் சேர்த்தது. நடனமாடும் போது அணிய தேவையான வெள்ளைப் பாவாடை, சட்டை, தாவணி வாங்கி வர கூறியது பள்ளி நிர்வாகம்.
ஏழ்மையால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருந்தது என் குடும்பம். அன்றாடம் வாழ்வை கடப்பதே பெரும் சிரமமாக இருந்தது. இந்த நிலையில் நடன உடை வாங்கித்தர பெற்றோரால் இயலவில்லை. கலை நிகழ்ச்சிக்கு தேர்வாகியும் பங்கேற்க இயலாத இக்கட்டால் தவித்தேன். அது குறித்த ஆதங்கத்தால் வகுப்பில் அழுதபடி அமர்ந்து இருந்தேன்.
இதை கவனித்த வகுப்பாசிரியை சாவித்திரி அழைத்து விசாரித்தார். என் நிலையை கண்ணீருடன் தெரிவித்தேன். பரிவுடன் தேற்றி, 'கவலைப்படாதே... நிகழ்வுக்கு தேவையான உடைகள் வாங்கி தருகிறேன்...' என ஆறுதல் கூறியதுடன் மறுநாளே நிறைவேற்றினார். அதை அணிந்து நிகழ்வில் நடனமாடி மகிழ்ந்தேன்.
என் வயது 66; விருந்து நிகழ்வுகளுக்கு சமையல் பணி செய்து வருகிறேன். பள்ளியில் கிடைத்த வாய்ப்பை நிறைவேற்ற உடை தந்து உதவிய ஆசிரியை சாவித்திரி மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
அவரது உதவியை, பேரன் பேத்தியருக்கு அவ்வப்போது நினைவு கூர்ந்து மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.
- சி.அனுசுயா, சின்னமனுார்.
தொடர்புக்கு: 97863 31216