PUBLISHED ON : நவ 28, 2026

பூங்குளம் கிராமத்தில் வசித்த கீதாவும், ராதாவும் நட்புடன் பழகினர். ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவள், கீதா; கல்வியில் மிகவும் சிறந்தவள். வசதியான வீட்டுப்பெண் ராதா; படிப்பில் சற்று பின்தங்கி இருந்தாள்.
அன்று பள்ளியில் கணிதத் தேர்வு நடந்தது. ராதாவுக்கு சில கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. மெதுவாக கீதாவிடம், ''உன் விடைத்தாளைக் காட்டு, நான் பார்த்து எழுதிக் கொள்கிறேன். ஈடாக உனக்கு விலையுயர்ந்த பேனா தருவேன்...'' என்றாள்.
அதற்கு சம்மதிக்காத கீதா, ''மற்றவர்களைப் பார்த்து எழுதுவது தவறு. அது உனக்கு உண்மையான அறிவைத் தராது...'' என்று மறுத்து விட்டாள்.
இதனால் கோபமடைந்து, அவளுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள், ராதா.
தேர்வு முடிவுகள் வந்தன. கீதா முதல் மதிப்பெண் பெற்றாள்; ராதா தோல்வி அடைந்தாள்.
ராதா அழுது கொண்டிருப்பதைப் பார்த்த கீதா, ''என்னிடம் காட்டிய கோபத்தை விடாமுயற்சியாக மாற்று. உனக்குத் தெரியாத பாடங்களை கற்றுத் தருகிறேன்...'' என்றாள்.
தவறை உணர்ந்த ராதா, அன்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டாள். அடுத்த தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாள். குறுக்கு வழியில் வெற்றி பெறுவதை விட, உண்மையாக உழைப்பதே சிறந்தது என புரிந்து கொண்டாள், ராதா.
குழந்தைகளே... நேர்மையான உழைப்பே உண்மையான வெற்றியைத் தரும்.
- கோபாலன் பத்மநாபன்
