
சென்னை, மண்ணடி முத்தியால்பேட்டை உயர்நிலை பள்ளியில், 1970ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தேன். வகுப்பில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களே அதிகம் இருந்தோம். அன்றாடம் உணவு கிடைப்பதே அரிதாக இருந்தது. என்றாவது அத்தி பூத்தாற் போல, தெருவில் விற்கும் ரீட்டா குச்சி, பால் ஐஸ் போன்றவற்றை, 10 காசுக்கு வாங்கி தருவர் பெற்றோர்.
ஆண்டு இறுதி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தோம். அன்று, ஆசிரியர்களுடன், மாணவர்களும் பங்கேற்கும் தேனீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாரிமுனை, என்.எஸ்.சி., போஸ் சாலையில் பிரபலமாக இருந்த, மாடர்ன் கபே ஓட்டலில் அது நடந்தது. விருந்தின் இறுதியில், கண்ணாடி கோப்பையில் ஐஸ்கிரீம் ஸ்பூனுடன் வந்தது.
அதுவரை குச்சியுடன் தான் ஐஸ்கிரீம் இருக்கும் என்று நம்பியிருந்தேன். கண்ணாடி கோப்பையில் கண்டதும் என்னவென்று தெரியாமல் முழித்தபடி வகுப்பாசிரியர் பாண்டியனிடம் கேட்டேன். என் அறியாமையை போக்கும் வகையில் அது பற்றி விளக்கி, உண்ணக் கற்றுத்தந்தார். நன்றாக படித்து வாழ்வில் உயர உற்சாகத்துடன் வாழ்த்தினார். மனதில் அவரது செயல் ஆழமாக பதிந்தது.
தற்போது என் வயது 72. வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் பொறுப்பான பதவி வகித்து ஓய்வு பெற்றேன். விருந்து நிகழ்வில் திணறிய போது, விளக்கமளித்து உயர்வுக்கு நம்பிக்கையூட்டிய வகுப்பாசிரியர் பாண்டியன் பாதங்களை வணங்குகிறேன். அவரது துாண்டுதல் செயல் மனக்கண்ணில் பசுமையாக உள்ளது.
- கே.வெங்கட கிருஷ்ணன், சென்னை.
தொடர்புக்கு: 97909 56566

