
அன்புள்ள அம்மா...
என் வயது, 15; தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. என் வகுப்புத் தோழி, 'பசும்பால் குடிப்பாயா...' என கேட்டாள்.
அவளுக்கு பதில் சொல்லும் வகையில், 'பசும்பால் குடிப்பேன்... அதில் தயாரித்த தேனீரும், காப்பியும் கூட விரும்புவேன்...' என கூறினேன்.
உடனே, 'மாட்டின் ரத்தம் தான் பசும்பால். வெள்ளை ரத்தத்தை குடிக்கும் ட்ராகுலா நீ...' என, அற்பமாக விமர்சித்து எள்ளி நகையாடுகிறாள். கேலியும் கிண்டலும் தினமும் தொடர்கிறது. அவள் வாயை அடைக்க என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. தக்க பதில் தந்து உதவுங்கள்.
இப்படிக்கு,
எஸ்.ராதிகா பவளமல்லி.
அன்பு மகளே...
ஒரு மரத்தில் விளையும் காய், கனிகளை தின்கிறோம்... அப்படி என்றால் மரத்தின் ரத்தத்தை குடிக்கிறோம் என அர்த்தப்படுத்த முடியுமா...
ஒரு பசு கர்ப்பம் தரிக்கும்போது, ஈஸ்ட்டோஜென், ப்ரோஜெஸ்ட்ரான் மற்றும் அட்ரினல் கார்டிகோஸ்டிராய்டு போன்ற ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும். இதைத் தொடர்ந்து, பசுவின் மடியும், பால் உற்பத்தி செய்யும் செல்களும் வளர்ச்சி அடையும். கன்றுக்குட்டி ஈன்ற பின் பசு, 'ப்ரோலாக்டின்' என்ற ஹார்மோனை அதிகம் உற்பத்தி செய்கிறது. இதனால், 'டோபமைன்' என்ற வேதிப்பொருள் சுரப்பு தடுக்கப்படுகிறது.
பசுவின் இரைப்பை நான்கு அறைகள் உடையது. அதற்கு உணவாகும் வைக்கோல் இரைப்பையின் முதலறையில் கூழாக்கப்படும். இதை புரதமாக மாற்றுகிறது இரண்டாவது அறை. மீதி இரு அறை பாதையில் மாற்றபட்ட புரதம் செல்கிறது. அடுத்து சத்துகள் ரத்த ஓட்டத்தால் உறிஞ்சப்படுகிறது. உறிஞ்சபட்ட சத்து பாற்சுரப்பிக்கு செல்கிறது. அங்கு, 'ஆல்விஓலை' என்ற செல்கள் சத்துகளை பாலாக மாற்றும் மேஜிக்கை செய்யும்.
பசுவின் மடியிலிருந்து பாலை பீய்ச்சி எடுக்கும் போதோ, கன்று பால் உறிஞ்சும் போதோ, 'ஆக்ஸிடோஸின்' என்ற பொருள் உற்பத்தியாகிறது. ஒரு லிட்டர் பால் கறக்க, பசுவின் மடி வழியாக, 500 லிட்டர் ரத்தம் பாயவேண்டும்.
கன்று குட்டியை ஈன்ற பின் 10 மாதம் வரை பசு பால் கறக்கும். பின் இரண்டு மாதங்கள் பால் கறக்காது. மீண்டும் பசு கர்ப்பம் தரித்தால் பால் சுரக்க ஆரம்பிக்கும். செயற்கையாக, பசுவுக்கு ஹார்மோன் செலுத்தி சினையாக்கி கன்று இன்றி பால் கறக்கும் முறையும் இப்போது உள்ளது.
பால் பண்ணை நிர்வாகங்கள் பொதுவாக இந்த குறுக்குவழியை கையாள்வதில்லை. கன்று ஈன்ற முதல் வாரம், 'ஸ்ட்ராபெர்ரி' என்ற ஒரு வகை பாலை சுரக்கும் பசு. அது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். பால் சுரப்பியில் சிறு ரத்த குழாய்களின் கிழிசலே இதற்கு காரணம். ஒரு வாரத்துக்கு பின் இயல்பான நிறத்துக்கு பால் மாறிவிடும்.
சாதாரணமாக ஒரு பசு ஒரு வேளைக்கு, 30 லிட்டர் வரை பால் கறக்கும். ஒரு பால் கறப்புக்கும் அடுத்த பால் கறப்புக்கும், 12 மணி நேர இடைவெளி தேவை. உயர் ரக பசுக்கள் ஒரு நாளைக்கு, 60 லிட்டர் வரை பால் சுரக்கும். உலக அளவில் பசும்பால், ஆட்டுப்பால், ஒட்டகப்பால், எருமைப்பால், சடை எருமை பால், குதிரைப்பால் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. சோயா, தேங்காய் பாலும் உற்பத்தியாகின்றன.
பசும்பாலிருந்து கொழுப்பு நீக்கம் செய்யப்பட்ட பால், வெண்ணெய், மோர், தயிர், புரதபவுடர், கேஸின், லாக்டோஸ் போன்ற உப பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலக உணவு தேவையில் ஒரு பகுதியை பூர்த்தி செய்கிறது பால். பால் தரும் பசு அமிர்தகொடை. அதற்கு நன்றி செலுத்தி உணவில் பயன்படுத்துவோம்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.