
அன்புள்ள அம்மா...
என் வயது, 32. அரசு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பெண். திருமணமாகி, ஐந்தாண்டுகளுக்கு பின் ஒரே மகன் பிறந்துள்ளான். இப்போது, நான்கரை வயதாகிறது. சென்னை மாநகரில் பெயர் சொல்லும் பள்ளி ஒன்றில், யு.கே.ஜி., படிக்கிறான். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பான். எப்போதும் உற்சாகத்தை காணலாம். எல்லாவற்றையும் முந்திக் கொண்டு செய்பவன்.
வீட்டில் மட்டுமின்றி, வகுப்பிலும் அதே மாதிரி செய்வதால், வகுப்பாசிரியர் என்னைக் கூப்பிட்டு, 'உங்க மகன் 'ைஹப்பர் ஆக்டிவ்' ஆக இருக்கிறான். உடனடியாக தகுந்த ஆலோசனை பெறுங்கள்...' என்றார்.
நான் மனதளவில் மிகவும் வருத்தமும், சோகமும் அடைந்தேன். வீட்டிற்கு வந்ததும் கணவரிடம் கூறினேன். இருவரும் சேர்ந்து அவன் செயல்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தோம். எங்களுக்கு மிகையாக ஒன்றும் தெரியவில்லை; ஆகவே பேசாதிருந்தோம்.
மீண்டும் பள்ளியில் இருந்து அழைப்பு வந்தது; கவலையுடன் ஓடினேன். விளையாட்டு நேரமான, 'பிடி' வகுப்பில், 'உங்கள் மகன் பொம்மை துப்பாக்கியை எனக்கு எதிராக நீட்டி, 'ராதா மிஸ்... ஐ வில் ஷூட் யூ...' என்றான். இப்படியே இவனை விட்டால் பின்னால் கிரிமினல் ஆகிவிடுவான். ஆகவே ஒரு மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெறுங்கள்' என, கண்டிப்புடன் கூறிவிட்டார்.
எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சாதாரணமாக குழந்தைகள், பொம்மை துப்பாக்கியை நீட்டி, இப்படி சொல்லி விளையாடுவது சகஜம் தானா... இதில் ஏதாவது மிகை இருக்கிறதா... இதில் தெளிவு பெற விரும்புகிறேன். என்ன சொல்கிறீர்கள்.
இப்படிக்கு,
- எம்.ஜெயலட்சுமி.
அன்பு சினேகிதி...
இன்றைய கால கட்டத்தில் இது போன்ற செயல்கள் எல்லாம் திரைப்படங்களில் நடிகர்களின் மிகை நடிப்பால் வரும் பிரதிபலிப்பு. துப்பாக்கி, பட்டாக்கத்தி போன்ற வன்முறை கருவிகள் இன்றி இன்று திரைப்படங்கள் வெளியாவது வெகு அபூர்வமாக இருக்கிறது.
போதாக்குறைக்கு தொலைக்காட்சித் தொடர்களிலும் இது போல் வன்முறை காட்சிகள் வந்துவிட்டன. தொலைக்காட்சி திரையிலே ரத்தம் தெறிக்கிறது. இவற்றை பார்த்து பழக்கப்படும் குழந்தைகள், இது போல் விளையாடுவது சகஜம் தான்.
ஆனால் ஒரு ஆசிரியை எதிரில், துப்பாக்கியை நீட்டி சிறுவன் அப்படி சொன்னது, பிழையாக தெரிந்து இருக்கிறது.
நீங்களே குழந்தையை கூப்பிட்டு, 'துப்பாக்கியை யாரிடமாவது நீட்டி, 'உன்னைச் சுட்டு விடுவேன்' என்று சொல்வது நல்லதல்ல கண்ணா... ஆசிரியை ரொம்ப நல்லவங்க... துப்பாக்கியெல்லாம், விளையாட்டில் சேராத விஷயம் செல்லம்...
'உன்னிடம் யாராவது துப்பாக்கியை நீட்டி, சுட்டு விடுவேன்னு சொன்னா, பயமா இருக்கும் தானே... அது போல, மற்றவர்களும் பயந்து விடுவர்... இனி அது போன்று விளையாட வேண்டாம் கண்ணா... ஓடி, ஆடி விளையாடலாம்... 'ஏ, பி, சி, டி'யை, எப்படி வேகமாகப் படிக்கலாம்னு கேட்டு விளையாடலாம்... 'ஓகே'வா செல்லம்...' என சொல்லிக் கொடுங்கள்!
பெற்றோர், குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும். அவர்களுடன் விளையாட வேண்டும். நல்ல கதைகளை கூறி, நல்லவற்றை மனதில் புகுத்த வேண்டும். முக்கியமாக குழந்தைகளிடம், அலைபேசி கருவியைக் கொடுக்கக் கூடாது. அவ்வப்போது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் முன்னிலையில் வன்முறை சார்ந்த காட்சிகள் நிறைந்த படங்களை பார்க்கக் கூடாது. அவை தான், இது போன்ற வேண்டத்தகாத பழக்கங்கள் உருவாகக் காரணமாகின்றன.
பெற்றோர் தங்கள் சுயநலம், சுயவிருப்பு வெறுப்புகளை விட்டு விட்டு, குழந்தைகளுக்காக வாழ பழகிக்கொள்ள வேண்டும். பெற்ற குழந்தைகளுக்காக, சிறிதேனும் தியாகம் செய்ய வேண்டும். நல்லது, கெட்டதை எடுத்து சொல்லி வளர்க்க வேண்டும். ஆரோக்கியமான இளைய சமுதாயம் உருவாக இதுவே மிகச் சிறந்த வழி!
- மிகுந்த அன்புடன், பிளாரன்ஸ்!

