
அன்புள்ள ஆன்ட்டி,
என் வயது 13; சென்னையில் உள்ள பிரபல பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறேன். பெண்கள் கிரிக்கெட் பைனல்ஸ் பார்த்த பின், எனக்கும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மாதிரி பெரிய கிரிகெட் வீராங்கனையாக வர வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது, ஆன்ட்டி. அதுக்கு நான் என்ன செய்ய வேண்டும்...
இப்படிக்கு,
- எல்.வாசுகி.
அன்பு மகளே...
முதலில், உன்னையே நீ கேள்வி கேட்டுக்கணும். எதுக்காக கிரிக்கெட் விளையாட ஆசைப்படுகிறாய்... சாதிக்கணும்னா; பேரும், புகழும் எடுக்கணும்னா; பணம் சம்பாதிக்கணும்னா...
நான் கூட கிரிக்கெட் கற்றுக் கொண்டேன். காலை 5:00 மணிக்கெல்லாம் எழுந்து, நுங்கம்பாக்கம் கிரிக்கெட் கிளப்புக்கு ஓடுவேன். நான் கற்றுக் கொண்டதன் காரணம், கிரிக்கெட்டை நன்றாக தெரிந்து கொள்ள; புரிந்து கொள்ள. அதனால் தான், என்னால் ஒவ்வொரு பந்தையும் ரசிக்க முடிகிறது; ஒவ்வொரு ஷாட்டையும் அதன் வீரியத்தோடு வியக்க முடிகிறது.
சாந்தா ரங்கசாமி கேப்டனாக இருந்தார். எம்.கே.மோகன் தான் எங்கள் கோச். அவ்வப்போது சிவராமகிருஷ்ணனும் வருவார்.
ஒரு விளையாட்டை, அதன் ஒவ்வொரு மணித்துளியையும் ரசிக்க வேண்டும் என்றே, நான் கிரிக்கெட் கற்றுக் கொண்டேன். உன் ஆசை என்ன...
கிரிக்கெட் வீராங்கனை ஆக வேண்டும் என்பதா; ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன் பிரீத் கவுர் அளவுக்கு உயரவேண்டும் என்பதா.. .
அப்படியானால், இப்போதே நீ ஒரு நல்ல பயிற்சியாளரிடம் சேர வேண்டும். கடுமையாகப் பயிற்சி பெறவேண்டும். எல்லா நேரமும் கிரிக்கெட் ஒன்றே மனதில் இருக்க வேண்டும். அர்ப்பணிப்பு வேண்டும்.
உன் வயது, 13 என்கிறாய். இன்னும் ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்து, கடைசியில் டெஸ்ட் பிளேயர் என்ற இலக்கை எட்டுவாய்.
அர்ஜுனனுக்கு வில்லால் அடிக்க வேண்டிய கிளி மட்டுமே தெரிந்தது என்ற கதை உனக்குத் தெரியுமல்லவா; அது போல, உன் சுவாசக் காற்று கூட, 'கிரிக்கெட்' என்று சொல்ல வேண்டும்.
எத்தனையோ கிரிக்கெட் வீரர்கள் சுயசரிதை எழுதியிருக்கின்றனர். அவற்றைப் படி.
முக்கியமாக நீ அவசியம் பார்க்க வேண்டியது 'மிதாலி ராஜ் பயோபிக்!'
ஜெமிமா ரோட்ரிக்ஸின் வெற்றிக்கு முக்கிய காரணம், தான் மட்டும் பேரும், புகழும் பெறவேண்டும் என்று விளையாடவில்லை; நம் நாட்டின் அணி வெற்றி பெறவேண்டும் என்கிற மேலான எண்ணமும், அதற்கான உந்து சக்தியும், வெறியுமே காரணம். அந்த சுயநலமற்ற, 'டீம் ஸ்பிரிட்'டை உனக்குள் வளர்த்துக்கொள்.
'போற்றுவோர் போற்றட்டும்; புழுதி வாரி துாற்றுவோர் துாற்றட்டும்' என்று ஓடு. திரும்பிப் பார்க்க நேரமின்றி விளையாடு. நம் அணி, நம் இந்திய நாட்டின் அணி என்ற எண்ணமே இலக்கானால், விண்ணையும் தொடுவாய் மகளே!
ஸ்மிருதி மந்தனா, ஷெபாலி வர்மா, தீப்தி ஷர்மா, வைஷ்ணவி... ஏன், ஜெமிமா ரோட்ரிக்ஸ், மிதாலி ராஜை கூட மிஞ்சுவாய். என் வாழ்த்துக்கள்!
- என்றும் அன்புடன், பிளாரன்ஸ்.

