
அன்புள்ள அம்மா,
நான் 8ம் வகுப்பும், தங்கச்சி 6ம் வகுப்பும் படிக்கிறோம். என் அப்பா, கோயம்பேடு சந்தையில் மூட்டை துாக்கும் தொழிலாளி. ஒரு நாளைக்கு, ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். ஆனால், வீட்டுக்கு நுாறு ரூபாய் கூட தரமாட்டார். வரும்போதே, மது பாட்டில் வாங்கி வந்திடுவாரு. தினம் இரண்டு பாட்டில் வாங்கிட்டு வருவாரு; சில நாள், அது மூன்று பாட்டிலாகக் கூட இருக்கும்.
அம்மா கேள்வி கேட்டால், போட்டு அடிப்பார். தலைமுடியை பிடித்து இழுத்து, காலால் உதைப்பார். அம்மா அடிபடுவதை பார்த்து, இருவருமே பயந்து நடுங்குவோம். தடுக்கப் போனால், எங்களுக்கும் அடி விழும். எங்கள் வீடு நரகமா இருக்கும்மா.
'அப்பாகிட்ட எதுவும் கேட்காதம்மா...' என்று, அம்மாவிடம் சொல்லி அழுவோம்.
'நான் எப்போது உங்கப்பன்கிட்ட பணம், காசு கேட்டிருக்கேன்... நாலு வீட்ல வேலை செய்து நான் உழைச்சு சம்பாதிச்ச பணத்தையும் பிடுங்கி குடிக்க ஓடினா, நா எப்படி சும்மா இருக்க முடியும்...' என்று, அம்மா அழுவாங்க.
எங்கள் வீடு மட்டுமல்ல; எங்கள் தெரு முழுசும் இதே பிரச்னை தான். இதையெல்லாம் நிறுத்த முடியாதாம்மா... எங்க வீடுகளும் அமைதியா, நிம்மதியா மாறாதாம்மா...
- விமல் குமார்
மாறும் மகனே...
காலம் ஒருநாள் மாறும்; நம் கவலைகள் யாவும் தீரும்.
எப்போது என்று நீ கேட்பது, என் காதில் விழுகிறது.
குடியற்ற குடிமக்கள் உருவாகும்போது.
'அது எப்போது உருவாகும்...' என்று நீ கேட்பதும், எனக்கு கேட்கிறது.
ஆனால், இது கேட்க வேண்டியவர்களின் காதுகளை எட்டினால் மட்டுமே, இதற்கு தீர்வு கிடைக்கும்.
அவர்களை குறை சொல்லி என்ன பயன்...
விஷம் என்று தெரிந்தும், அதை குடிப்போர் மீதும் தான் பெருந்தவறு இருக்கிறது.
இதனால் ஏற்படும் தீமைகள், பெண்கள் படும் இன்னல்கள், பெற்ற குழந்தைகளின் மனப் போராட்டங்கள் போன்றவற்றை உணர்ந்து, குடிப்பவர்கள் திருந்தினால் தவிர, வேறு வழியில்லை.
'குடிப்பவனாய் பார்த்து திருந்தாவிட்டால், குடியை ஒழிக்க முடியாது' என்று தான், எழுத வேண்டும். அதுதான் கசப்பான உண்மை நிலை.
- அன்புடன், இந்துமதி.

