தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ இளஸ் மனஸ்! (341)

 இளஸ் மனஸ்! (341)

 இளஸ் மனஸ்! (341)


PUBLISHED ON : பிப் 14, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 14, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா,

நான், தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன். என் தந்தை, இரண்டு மாதங்களுக்கு முன் மரணமடைந்து விட்டார்.

அப்பா இருந்தவரை, அவரோடு அம்மா அடிக்கடி முரண்படுவார். சண்டையெல்லாம் போட மாட்டார்; ஆனால், அப்பாவின் விருப்பமும், அம்மாவின் விருப்பமும் வேறு வேறாக இருந்தது. எல்லாம் தன் விருப்பப்படியே நடக்க வேண்டும் என்று நினைத்து, அதன்படியே நடந்து கொள்வார், அம்மா.

வீட்டின் முன், காம்பவுண்ட் சுவரை ஒட்டி, மண் தரையில் சில செடிகளும், விருட்சிப்பூ மரம் ஒன்றும் இருந்தது. சிகப்பு நிறத்தில், பெரிதாக விருட்சிப்பூ, கொத்துக் கொத்தாக பூக்கும். தினமும் அப்பா அதை பறித்து, கடவுளுக்கு வைத்து, பூஜை செய்வார்.

ஆனால், அந்த மண் தரையில் எறும்பு, பெரிதாக புற்று வைத்தது. மழைக் காலமானால் கருப்பு கருப்பாக, நீள நீளமாக நிறைய புழுக்கள் நெளியும். கருப்பு, சிகப்பு மரவட்டைகள் ஊர்ந்து வீட்டினுள் வரும். அதற்காக அந்த மரத்தையும், செடிகளையும் அகற்றி, சிமென்ட் தரையாக்க முடிவு செய்தார், அம்மா.

ஆனால், அந்த விருட்ச மரத்தை வெட்டாமல், அந்த இடத்தை மட்டும் அப்படியே விட்டு விடும்படி அம்மாவிடம், அப்பா கேட்டுக் கொண்டார்; அதற்கு அம்மா ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடமும், 'அம்மாவிடம் சொல்லுடா...' என்றார். மரத்தை வெட்ட வந்தவரிடமும் கேட்டுக் கொண்டார். புழுக்களுக்கும், பூச்சிக்கும் பயந்து, அம்மா அதற்கு செவி சாய்க்கவில்லை.

அப்பா, இறப்பதற்கு முன், இந்த விஷயத்திற்கு தான் ஆசைப்பட்டார். தற்போது அப்பாவின் ஆசையை நிறைவேற்றவில்லையே என்று, அதை நினைத்து, நினைத்து அம்மா அழுகிறார்; குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார். அம்மாவை எப்படி தேற்றுவது என தெரியவில்லை.

- இப்படிக்கு, சேகர்.

அன்பு சேகர்,

உன் அம்மாவின் உணர்வுகள் எனக்கு புரிகிறது. நிறைய வீடுகளில், 'மதுரை ஆட்சி' தான்; 'மீனாட்சி ஆட்சி' தான்.

ஆண்களை விட பெண்கள், பிடிவாதக்காரர்களாகவே இருக்கின்றனர். எப்படியாவது தாங்கள் நினைத்ததை நடத்தி விடுகின்றனர். உன் அம்மா, நல்லதை நினைத்து தான் செய்திருக்கிறார். ஆனாலும், அப்பா கேட்டுக் கொண்ட மாதிரி, அந்த மரத்தை அப்படியே விட்டு விட்டு, சுற்றிலும் சிமென்ட் போட்டிருக்கலாம்.

உன் அப்பா, பெரிதாக ஒன்றும் கேட்டு விடவில்லை. பூஜைக்காக தான் அந்த மரத்தை வெட்ட வேண்டாம் என்று கூறி இருக்கிறார். சின்ன ஆசை தான். அதற்காக மரம் வெட்டுபவரிடம் கூட மன்றாடி இருக்கிறார் என்பது தான், பெரிய வேதனை.

அதைக்கூட நிறைவேற்றாத பிடிவாத குணம் தான், உன் அம்மாவை இப்போது இம்சைப்படுத்துகிறது.

எப்போதுமே மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்; அடுத்தவர்களின், ' சென்ட்டிமென்ட்' விஷயங்களில் குறுக்கிடக் கூடாது. தனக்கு இருக்கும் ஆசை போல் தான், மற்றவர்களுக்கும் வேறு ஆசைகள் இருக்கும் என்பது, அடி மனதில் பதிய வேண்டும்.

ஒருவர் உயிருடன் வாழும்போதே, அவரது எண்ணங்களுக்கு மதிப்பளித்து, நம்மால் இயன்றவரை ஆசைகளை நிறைவேற்றினால், இதுபோன்ற குற்ற உணர்ச்சி தோன்றாது.

இது, உன் அம்மாவின் தொண்டையில் குத்திக் கொண்ட முள்; காலம் தான் இந்த காயத்தை ஆற்ற வேண்டும். குடும்ப தலைவனோ, தலைவியோ... வீட்டிலுள்ள பிறர் எண்ணங்களுக்கும், ஆசைகளுக்கும் மதிப்பளித்து நடந்து கொண்டால் மட்டுமே, நல்ல குடும்பம் எனக் கருதப்படும்; சிறந்த இல்லறம் என்று போற்றப்படும்.

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்!

- அன்புடன், இந்துமதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us