
அன்புள்ள அம்மா,
நான், 7ம் வகுப்பு மாணவன். என் வலது கையில், ஆறு விரல்கள் உள்ளன. சுண்டு விரலுக்கு பக்கத்தில், சின்னதாய் மற்றுமொரு விரல். அதே மாதிரி, வலது கால் பாதத்திலும் சுண்டு விரல் பக்கத்தில் சின்னதாக இன்னொரு விரல், பிறவியிலேயே இருக்கிறது.
பள்ளிக்கு ஷூ போட்டு செல்ல சிரமமாக உள்ளது என்பதால், என்னை செருப்பு போட பள்ளி நிர்வாகத்தினர் அனுமதித்து உள்ளனர். என் குறைபாடு பற்றி ஆசிரியைகள் கண்டு கொள்ளாமல் அன்பாக இருந்தாலும், வகுப்பு மாணவர்களில் சிலர் கிண்டல் செய்கின்றனர்.
'ஆறு விரல் நாயகா...' என்றே கூப்பிடுகின்றனர். மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அழுகை வருகிறது. இந்த பிரச்னையை தீர்க்க முடியுமா, அம்மா...
- இப்படிக்கு, சரவணன்.
அன்பு சரவணா,
கை மற்றும் காலில் ஆறு விரல் இருப்பதற்கா வருந்துகிறாய்... இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை.
எத்தனையோ பேர், தங்களிடம் இருக்கும் குறைகளை சவாலாக ஏற்று, சாதனை புரிந்திருக்கின்றனர்.
அவர்களில் சிலரை பற்றி மட்டும் கூறுகிறேன்...
* விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி, உன் பாடப்புத்தகத்தில் படித்திருப்பாய். செவித்திறன் குறைபாடும், ஞாபக மறதியும் உள்ள அவரின் கண்டுபிடிப்புகள், எண்ணிலடங்காதவை
* ஹெலன் கில்லர், பார்வை மற்றும் செவி திறனற்றவர். அவர் எழுத்தாளர், அரசியல் ஆர்வலர் மற்றும் விரிவுரையாளராக தன் முத்திரையை பதிக்கவில்லையா...
* மேரி கியூரி, கண் பார்வையற்றவர். அறிவியல் சாதனையாக ரேடியம் கண்டுபிடித்தவர்; நோபல் பரிசும் பெற்றவர்
* ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிக்வுஜித், கைகள் மற்றும் கால்கள் இல்லாமல் பிறந்தாலும், உத்வேக பேச்சாளராகி, பலருக்கு முன்னுதாரணமாக இருந்தார்
* அமெரிக்காவை சேர்ந்த இயற்பியலாளர், ஸ்டீபன் ஹாக்கிங். நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு, உடல் உறுப்புகள் செயலிழந்தாலும், தன் புத்திசாலித்தனத்தால் உலகையே வியக்க வைத்தவர்
* தென் அமெரிக்க நாடான மெக்சிகோவை சேர்ந்த ஓவியர், ப்ரிடா காலோ, உடல்நல குறைபாடு இருந்தாலும், கலை உலகில் ஜொலித்தவர்
* ஜெர்மனியை சேர்ந்த இசையமைப்பாளர் பீத்தோவன், செவித்திறன் இழந்த பிறகும், அழியா புகழ்பெற்ற இசை கட்டமைப்பை தந்தவர்
* சுதா சந்திரன், நம்மூர் பரதநாட்டிய கலைஞர் மற்றும் நடிகை. விபத்தொன்றில் ஒரு காலை இழந்தவர். செயற்கை கால் பொருத்தி, நடனமாடியும், திரைப்படம் மற்றும் 'டிவி' தொடர்களில் நடித்தும் வருகிறார்.
உடலில் குறை இருக்கும் எத்தனையோ விளையாட்டு வீரர்கள், சாதித்து வருகின்றனர். இவர்களை விடவா உன் குறையை பெரிதாக கருதுகிறாய்...
ஆறாவது விரலால், உனக்கு எந்த அசவுகரியமும் ஏற்பட வாய்ப்பில்லை. கிண்டல் செய்வோரை அலட்சியப்படுத்தி, உன் இலக்கை நோக்கி முன்னேறி செல். உன் முன்னேற்றம் அவர்களது வாயை அடைக்க செய்து விடும்.
- உன் பிரியத்துக்குரிய, இந்துமதி.

