PUBLISHED ON : மே 23, 2026

அன்புள்ள இந்துமதி,
வெகு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள், நான். தனியார் நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் பணியில் உள்ளார், கணவர்; சுமாரான வருமானம், வாடகை வீடு.
என் மகன், பிளஸ் 2 முடித்து, இப்போது தான் கல்லுாரியில் சேர்ந்திருக்கிறான். அவனுக்கும் கீழே, இரண்டு பெண் குழந்தைகள், 8ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு படிக்கின்றனர்.
பள்ளியில் படித்தவரை ஒழுங்காக, அமைதியானவனாக இருந்தான், மகன். கல்லுாரியில் சேர்ந்த பின், அவன் குணம் மாறி விட்டது. தலைமுடியை, 'காலி பிளவர்' மாதிரி வெட்டி, மாற்றினான்; ஒரு காது குத்தி, எதையோ போட்டிருக்கிறான். கையில் விதவிதமான கயிறுகள். 'என்னடா, இதெல்லாம்...' என்று கேட்டால், எரிந்து விழுகிறான்.
அவனது கல்லுாரி கட்டணம் கூட, கடன் வாங்கி தான் கட்டினேன். 'ஆன்ட்ராய்டு போன்' வாங்கி தர சொல்லி அடம் பிடிக்கிறான்.
'நம் குடும்ப நிலையில் அதெல்லாம் முடியாது...' என்றேன்.
சண்டை போட்டு, அமர்க்களம் செய்கிறான். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனை திருத்த வழி உண்டா...
- இப்படிக்கு,
நித்யா, மதுரை.
அன்பு நித்யா,
பள்ளியில் படித்தவரை, மூலையில் கட்டப்பட்ட கன்றுக்குட்டியாக இருந்தான், உன் மகன்; கல்லுாரிக்கு சென்றதும் கோவில் மாடாகி விட்டான்.
பள்ளியில் கட்டுப்பாடு இருந்திருக்கும்; சேர்க்கை சரியாக இருந்திருக்கும். ஆனால், இப்போது அவிழ்த்து விட்ட காளை; சேர்க்கையும் சரியாக இருக்காது.
'உன் நண்பர்கள் யார் என்று சொல்; உன்னை பற்றி சொல்கிறேன்...' என்பர்.
ஆரம்பத்திலேயே அவனை கண்டிப்பது தான் நல்லது. ஆனால், கடுமையான வார்த்தைகளையோ, கை நீட்டுதலோ கூடாது. தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்பர். ஆகவே, அவனிடம் ஒரு தோழனை போல் நடந்து கொள்.
தோளில் கை போட்டு, குடும்ப நிலைமையை இதமாக எடுத்துக் கூறு. 'தற்போது, 'ஆன்ட்ராய்டு போன்' வாங்கும் இடத்தில் நாம் இல்லை...' என, அவனுக்கு புரியும் படி சொல்.
அதுவுமின்றி, கர்நாடகா மாநிலத்தில் பள்ளி, கல்லுாரிகளில் மாணவ - மாணவியர், ஆன்ட்ராய்டு போன் உபயோகிப்பதை தடை செய்திருக்கின்றனர். அதே போல, மற்ற மாநிலங்களும் அதை அமல்படுத்த நினைக்கின்றன. தற்போதைய கால கட்டத்தில், இந்த சட்டம் மிக அவசியமானது. 'ரீல்ஸ்' மோகத்தால் விளைகின்ற கேடுகளை, தினமும் செய்தித்தாள், 'டிவி'யில் காண்கிறோம்.
'தமிழகத்திலும் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டால், ஆன்ட்ராய்டு போன் உபயோகிப்பது பள்ளி, கல்லுாரிகளில் தடை செய்யப்படும்...' என, உன் மகனிடம் விளக்கிச் சொல்.
இவற்றையெல்லாம் நட்புறவோடு, நேசத்துடனும், தோழமையுடனும் மகனுக்கு எடுத்துச் சொல். நிச்சயம் புரிந்து கொள்வான். பெற்ற தாயை விட சிறந்த ஆசிரியை, யாரும் இருக்க முடியாது.
- அன்புடன், இந்துமதி.
