PUBLISHED ON : ஜூன் 06, 2026

அன்புள்ள அம்மா...
என் மகனுக்கு, 5 வயது; ப்ரீ ஸ்கூலில் சேர்த்திருக்கிறேன். பகல் 1:00 மணிக்கு ஆயா கூட்டி வந்து வீட்டில் விடுவார். வீட்டுக்கு வந்தவுடன் ஆட்டம் போடுவான்; சோபாவின் மீது ஏறி கீழே குதிப்பான்; சாப்பாட்டு மேஜை நாற்காலியை கவிழ்த்து, தள்ளிச் சென்று, 'ஐஸ்... ஐஸ்...' என்று விற்பது போல் நடிப்பான். இவையெல்லாம் அவனது அன்றாட குறும்புகள்.
பெங்களூரிலிருக்கும் என் அம்மா, என்னோடு சில காலம் தங்கியிருக்க வந்திருந்தார். என் மகனின் சேட்டைகளை, அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
'சோபா மீது ஏறி குதிக்காதடா... அழுக்காகி விடும்; அதோடு சீக்கிரம் கிழிந்து விடும்... விளையாட்டு பொருட்களை கீழே இப்படி இறைக்காதே... மேஜை, நாற்காலியை தரையில், கவிழ்த்து இழுத்தால், எத்தனை நாளைக்கு வரும்...' என்றெல்லாம் கண்டிப்பார்.
பதிலுக்கு, 'பாட்டி, நீ இங்க விருந்தாளியாக தான் வந்தே... அதுமாதிரி நடந்துக்க... இல்லைன்னா திரும்பி நீ உன் ஊருக்கே போயிடு...' என்றான்.
அதைக் கேட்டு அம்மா அழுதபடி ஊருக்கு கிளம்பி விட்டார். நான் எவ்வளவு சொல்லியும் சமாதானமடையவில்லை. இவனை கண்டித்தால், 'போ மம்மி, பாட்டி ஏன் என் விஷயத்தில் தலையிடணும்...' என்ற பதில் வருகிறது.
ஐந்து வயது பையன், இந்த காலத்தில் இப்படி பேசுகிறானே... நம் காலத்தில் நாம் இப்படி பேசியிருப்போமா?
இந்த கால குழந்தைகள் ஏன் இப்படி இருக்கின்றனர்?
- இப்படிக்கு,
ப்ரியம்வதா ராகவன்.
அன்பு ப்ரியம்வதா...
உங்கள் மகன் மட்டுமில்லை இந்த கால குழந்தைகளே இப்படித்தான் இருக்கின்றனர்.
இதைத்தான் தலைமுறை இடைவெளி என்கிறோம். ஆங்கிலத்தில் சொல்வதென்றால், 'ஜெனரேஷன் கேப்' எனலாம்.
இது எப்படி உருவாகிறது?
கரு உருவாகும் போதே இதுவும் கூட உருவாகி விடும் போலிருக்கிறது.
ஆனால் ஒன்று, நம் காலத்தை விட இக்கால குழந்தைகள் புத்திசாலியாக இருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் 'லாஜிக்' கேட்கின்றனர். விஞ்ஞானப்பூர்வமாக விளக்கம் தந்தால் தான் ஒப்புக் கொள்கின்றனர்.
எதற்கும் ஆதாரம் வேண்டும் அவர்களுக்கு...
தங்கள் எல்லைகளை தாங்களே வரையறுக்கின்றனர்; பிறர் தலையீடுகளை அனுமதிக்க மறுக்கின்றனர்.
நம்மைப் போன்று பெரிதாக பந்த பாசங்களில் சிக்கி கொள்வதில்லை.
சுலபமாக, 'ஸோ வாட்?' என்ற கேள்வி வெளிப்படுகிறது.
ஆக மொத்தத்தில், இது தலைமுறை இடைவெளி மட்டுமின்றி, கலாசார இடைவெளியாகவும் தான் பார்க்கிறேன்.
எல்லாவற்றிற்கும் தொழிலியல் முன்னேற்றமும், விஞ்ஞான முன்னேற்றமும், உலக மயமாக்கலும் அதில் காட்டப்பட்ட தாராளமயமாக்கலும் தான் காரணம்.
இப்படிப் பார்த்தால் நாம் விஞ்ஞானிகளை விட, தொழில்நுட்ப வல்லுனர்களை விட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் தான் அதிகம் கடமைப்பட்டவர்களோ என்று தோன்றுகிறது.
உங்கள் மகனை பற்றி அதிகம் கவலை கொள்ள வேண்டாம். இக்கால பிள்ளைகளை போல், இக்கால அம்மாக்களாக நாமும் மாறி விடத்தான் வேண்டும். வேறு வழியில்லை!
- அன்புடன், இந்துமதி.
