PUBLISHED ON : ஜூலை 04, 2026

அன்புள்ள இந்துமதி ஆன்ட்டி,
நான் சிறுவர்மலர் இதழை தொடர்ந்து படித்து வருகிறேன். என் கஷ்டத்தை, உங்க கிட்ட சொல்லலாம்ன்னு நினைத்து எழுதுகிறேன். என் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்கின்றனர். காலை என்னை பள்ளியில் இறக்கி விட்டு செல்வர். பள்ளி முடிந்ததும் ஆட்டோக்காரர், வீட்டில் கொண்டு வந்து விடுவார். கீழ் வீட்டில் சாவி இருக்கும். அதை வாங்கி திறந்து வீட்டுக்குள் சென்றால், நான் மட்டும் தனியாக இருக்க வேண்டும்.
தனிமையில் பயமாக இருக்கும் ஆன்ட்டி; பசி எடுக்கும். அம்மா பிஸ்கட்டும், பிரெட்டும் டைனிங் டேபிளில் வைத்திருப்பார். தினமும் அதையே சாப்பிட பிடிக்கவில்லை. என் வகுப்பில் இருக்கும் மற்ற நண்பர்கள் வீட்டுக்கு சென்றால், அவர்கள் அம்மா விதவிதமாக சிற்றுண்டி செய்து கொடுப்பதை பார்த்திருக்கிறேன். தோசை, அடை, சமோசா, கட்லட் என எல்லாம் செய்வதாக சொல்வர். நண்பர்கள் சொல்வதை கேட்டால், நாக்கில் எச்சில் ஊறும். 'நம் அம்மாவும், அந்த மாதிரி செய்ய மாட்டாங்களா'ன்னு இருக்கும்.
என் அம்மாவை வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்க சொல்லுங்கள் ஆன்ட்டி. இளஸ் மனஸ் பகுதியில் நீங்க எழுதும் பதிலை அம்மாவிடம் காட்டுவேன். ப்ளீஸ் ஆன்ட்டி.
- இப்படிக்கு,
விக்னேஷ்.
அன்பு விக்னேஷ்,
என் பதிலை அம்மாவிடம் காட்டுவது இருக்கட்டும். முதலில் நீ படித்து புரிந்து கொள்.
இது விலைவாசி உச்சாணி கொம்பில் இருக்கும் காலம். மின்சார கட்டணமே ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு வருகிறது. இது தவிர வீட்டு வாடகை, பால், காய்கறி, உன் பள்ளி கட்டணம், ஆட்டோ வாடகை கட்டணம் என்று எத்தனை இருக்கிறது!
உன்னை மேற்படிப்பு படிக்க வைக்க பெற்றோர் ஆசைப்படுவரே...
இதற்கெல்லாம் பணம் வேண்டாமா... நான் சொன்னது தவிர, இன்னும் எத்தனை செலவுகள் இருக்கின்றன தெரியுமா...
ஒருவர் சம்பளத்தில் வாழ முடியாத காலமப்பா இது. எத்தனை பணம் வந்தாலும் போதாத காலம். சாண் ஏறினால் முழம் சறுக்கும். உடம்பு சரியில்லை என்று ஒருமுறை மருத்துவரை பார்க்க சென்றால் போதும், அவர் பரிசோதனை எடுக்க சொல்லி நீண்ட பட்டியல் தருவார். 'நான் சொல்லும் பரிசோதனைக்கூடத்தில் தான் எடுக்க வேண்டும்' என்பார். இதற்கு 3,000 ரூபாய் வரை செலவழிக்க வேண்டி இருக்கும்.
இப்போதெல்லாம் எந்த ஒரு மருத்துவரும், 300 முதல் 750 ரூபாய்க்கு குறைந்து கட்டணம் வாங்குவதில்லை. அதன்பின் மருந்து, மாத்திரைகள் என, எல்லாம் சேர்த்து பார்த்தால், ஒருமுறை மருத்துவரிடம் சென்றால், கிட்டத்தட்ட 5,000 ரூபாய் செலவழிக்க வேண்டி இருக்கும்.
இதையெல்லாம் சமாளிக்கத்தான் உன் அம்மா அலுவலகம் செல்கிறார். இல்லாவிட்டால், அவருக்கு மட்டும் உன்னை இப்படி வீட்டில் தனியாக விட்டு செல்ல பிடிக்குமா என்ன...
எந்த அம்மாவும் வீட்டிலிருந்து குழந்தைகளை பார்த்துக் கொள்ளத்தான் பிரியப்படுவர். பள்ளிக்கூடம் விட்டு வருகிற குழந்தைகளை வாரியணைக்க ஆசைப்படுவர்.
சீருடை மாற்றி, முகம், கை, கால் கழுவ வைத்து, தான் சூடாக செய்து வைத்திருக்கும் சிற்றுண்டியை கொடுத்து, தன் குழந்தை சாப்பிடுவதை பார்த்து சந்தோஷப்படுவர். ஆபீசுக்கு சென்று செய்வது தான் வேலை என்றில்லை. வீட்டை பராமரிப்பதும் பெரிய வேலை தான். என்ன... இதற்கு வருமானமில்லை; அதற்கு வருமானம் உண்டு.
உன் அம்மா அலுவலகம் செல்வது உனக்காக தான் விக்னேஷ். உன் எதிர்காலத்திற்கு தான். இதை அறிந்து நீ தான் உன் அம்மாவை புரிந்து கொள்ள வேண்டும். குடும்பம் என்பது மிகப்பெரிய விஷயம். சமூகத்தின் அச்சாணி. இதில் முடிந்தவரை ஒவ்வொருவரும் விட்டுக் கொடுத்தும், சில தியாகங்களும் செய்தால் தான் குடும்பம் என்ற வண்டி சீராக ஓடும்; சமூகம் என்ற அச்சாணி முறியாமல் இருக்கும்.
பல முறை படித்து இதை புரிந்து கொள் மகனே!
- அன்புடன், இந்துமதி.
