தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!


PUBLISHED ON : ஜூலை 18, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள ஆன்ட்டி,

என் அம்மா நிறைய படித்தவர். எம்.எஸ்சி., கணிதமும் முடித்துள்ளார். நான் 10ம் வகுப்பு படிக்கிறேன். கணக்கு பாடம் அவ்வளவாக எனக்கு வராது. என் அம்மா வேலைக்கு எங்கும் போகவில்லை. அதற்காக அப்பா திட்டுவார். 'படித்த படிப்பை வீணாக்குகிறாயே... எங்காவது பேராசிரியை வேலைக்கு செல்லலாமே...' என்று கூட சொல்லி பார்த்தார்; ஆனால், அம்மா கேட்கவில்லை.

அம்மாவிற்கு 'டிவி'யில் நெடுந்தொடர் பார்ப்பதில் விருப்பம். தொடர்களை விடாமல் இரவு, 10:00 மணி வரை பார்ப்பார். அப்பா அலுவலகத்திலிருந்து வந்ததும், அவசர அவசரமாக காபி கலந்து சாப்பாட்டு மேஜையில் வைத்து விட்டு, மீண்டும், 'டிவி' தொடர் பார்க்க சென்று விடுவார்.

இரவு அப்பாவும், நானும், 'பசிக்கிறது... சாப்பாடு போடுங்கள்...' என்றால், 'மேஜை மீது எடுத்து வைத்திருக்கிறேன். நீங்களே போட்டு சாப்பிடுங்கள். இல்லாவிட்டால், காத்திருங்கள். விளம்பர இடைவேளையில் வருகிறேன்...' என்று கூறி விடுவார்.

எம்.எஸ்சி., கணிதம் படித்தவரிடம், 'இந்த கணக்கு புரியவில்லை. சொல்லி தாருங்கள்...' என்றால், 'எனக்கு நேரமில்லை; பேசாமல் டியூஷனுக்கு போ... 'டியூஷன் பீஸ்' கட்டி விடுகிறேன்...' என்கிறார். மெத்தப்படித்த அம்மா இப்படி இருக்கலாமா, ஆன்ட்டி.

- இப்படிக்கு,

விஜயேந்திரன்.



அன்பு விஜய்...

மெத்தப்படித்த உன் அம்மா மட்டுமல்ல, ஒட்டுமொத்த தாய்க்குலங்களும் இப்படித்தான் இருக்கின்றனர். உருப்படாத, குடும்ப ஒற்றுமையைக் குலைக்கிற, 'டிவி' தொடர்களில் மூழ்கி கிடக்கின்றனர்.

தமிழகத்தில் மட்டுமல்ல... தெலுங்கு, கன்னடம் மொழி சார்ந்த தாய்க்குலங்களும் இப்படி கட்டுண்டு கிடப்பது தான் விசித்திரம்.

நான், 'டிவி' தொடருக்கு எதிரானவள் அல்ல. நானே, 'டிவி' தொடர்கள் தயாரித்தவள் தான். தனியார், 'டிவி'யில் மிகவும் பிரபலமான, 'கங்கா, யமுனா, சரஸ்வதி' கதை என்னுடையது. அன்பு, நட்பின் மேன்மை, குடும்பத்தின் பந்த பாசம், தியாகத்தின் உயர்வு இவற்றை கொண்டு எழுதப்பட்டு தயாரிக்கப்பட்ட தொடர் அது.

அதுபோன்ற நல்லவற்றை சொல்லி, பார்ப்போரின் மனதை உன்னதமாக்கி, மக்களை மேம்படுத்தும் தொடர்களா இப்போதெல்லாம் வருகின்றன?

வில்லன் நடிகர்கள் பி.எஸ்.வீரப்பா, நம்பியார் உயிர் பெற்று, உருமாறி, 'டிவி' தொடர்களின் மாமியார்களாக, மருமகள்களாக வருகின்றனர்.

கொலை செய்ய, கருவை கலைக்க, குடும்பத்தை பிரிக்க கதைகள் அஞ்சுவதே இல்லை. இந்த கலாசார சீர்கேட்டின் ஒரே நன்மை, சினிமா வாய்ப்பு கிடைக்காத எத்தனையோ இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், வசனகர்த்தாக்கள், லைட்மேன் வரை தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வேலை கிடைக்கிறது. அவர்கள் வீடுகளின் அடுப்பு அணையாமல் இருக்கிறது. அவர்களின் குடும்பங்களும், குழந்தைகள் கல்வி மேம்பாடும் அடைகின்றன என்ற ஒரே ஆறுதல் தான்.

உன் அம்மா போன்ற பெண் குலங்கள், தாங்களாக திருந்தினால் தான் உண்டு. இந்த பெண்கள், தங்கள் பிள்ளைகளை, குடும்பத்தை நினைத்து பார்க்க வேண்டும். அவர்களின் உயர்வுக்கு பாடுபட வேண்டும். பிள்ளைகளின் படிப்பை கவனிக்க வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கும், கல்லுாரிக்கும் சென்ற பின், கணவரையும் அலுவலகத்திற்கு அனுப்பி விட்டு பின், 'டிவி' நிகழ்ச்சிகளை பார்த்தால், யாருக்கும் பாதிப்பு இருக்காது.

இதை கட்டாயமாக குடும்ப தலைவியர் உணர வேண்டும். அதுவும் உன் தாய் படித்தவர்... ஒரு பெண் கல்வி பெற்றால் அந்த குடும்பமே கல்வி பெறும் என்பர். உயர் கல்வி பெற்ற உன் தாய், உனக்கு அந்த கல்வியை வழங்க வேண்டுமல்லவா? கேட்க வேண்டியது உன் உரிமை. தவறை உணர்ந்து உனக்கு கற்பிக்க வேண்டியது அவர் கடமை.

அம்மா என்பவள், குழந்தையின் முதல் ஆசிரியை. வீடு என்பதே அக்குழந்தையின் முதல் பள்ளி. உன் அம்மாவிடம் இந்த 'இளஸ் மனஸ்' பதிலை படிக்க கொடு. நிச்சயம் தன் தவறை உணர்ந்து கடமையில் ஈடுபடுவார்.

- அன்புடன், இந்துமதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us