PUBLISHED ON : ஜூலை 25, 2026

அன்புள்ள அம்மா...
நான், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. மத்திய தர வருமானத்துக்கும் கீழ்பட்ட குடும்பம் தான் எங்களுடையது. அரசு பள்ளியில் தான் படிக்கிறேன்.
என் அம்மாவும், பக்கத்து வீட்டு ஆன்ட்டிகளும் சேர்ந்து, 'இந்த காலத்தில் பெண்கள் அணிகிற உடைகள் தான், பாலியல் குற்றங்கள் நடைபெற காரணமாக இருக்கிறது' என்று திட்டவட்டமாக வாதாடுகின்றனர். அதையே பிரசாரம் போல் மற்றவர்களிடமும் கூறி வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமைகளுக்கு இன்றைய இளம் பெண்கள் அணிகிற உடைகள் தான் காரணமா ஆன்ட்டி? விளக்கமாக பதில் சொல்லுங்கள்.
- இப்படிக்கு,
செண்பகவல்லி.
அன்பு மகளே...
பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உன் அம்மாவும், அக்கம் பக்கத்து பெண்களும் கூறுவது போல் உடை தான் காரணம் என்றால், இரண்டு மற்றும் நான்கு வயது பெண் குழந்தைகள், ஐந்து வயது சிறுமி, பிறந்து ஒரு ஆண்டு கூட எட்டாத சின்னஞ்சிறு சிசு என, பலரும் பாலியல் வன்கொடுமையால் சீரழிந்து சிதைக்கப்பட்டு வருகின்றனரே... பலரும் கை, கால்கள் உடைக்கப்பட்டு சின்னாபின்னமாகி இறப்பது ஏன்...
இது தவிர, 60 முதல், 80 வயதுள்ள மூதாட்டியரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனரே...
இவை எல்லாம் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளால் ஏற்பட்டனவா...
சமீபத்தில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே மூன்று வயது சிறுமியை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி, கொடூரமாக கொன்றது, அந்த சிறுமி அணிந்திருந்த ஆடையினாலா...
ஒரு வயது குழந்தையையும், 70 வயது மூதாட்டியையும் கூட விட்டு வைக்காமல் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்குவது, அவர்கள் அணியும் உடை காரணமாகவா...
குழந்தைகளும், சிறுமியரும், வயதான முதியோரும் கவர்ச்சிகரமான உடையா உடுத்துகின்றனர்; தெருவில், 'பிகினி' உடை அணிந்தா சுற்றுகின்றனர்.
உன் அம்மாவும், அக்கம் பக்கத்து பெண்களும் இவற்றையெல்லாம், 'டிவி'யில் பார்த்து சொல்கின்றனரா; செய்திதாள்களில் படிக்கின்றனரா அல்லது வெற்று, 'டிவி' தொடர்களில் மூழ்கி தான்தோன்றித்தனமாக பேசுகின்றனரா...
வெளி நாடுகளில் பெண்கள் அதிக கவர்ச்சியாக உடையணிகின்றனர். அங்கெல்லாம் இதுபோல் பாலியல் குற்றங்கள் நடக்கின்றனவா என்ன...
வெளி நாடுகளில் பெற்றோர், குழந்தையை அடித்தால் கூட தண்டனை உண்டு.
நம் நாட்டில் தான், கிராமப்புறங்களில் வன்முறைகள் நடக்கின்றன. பெண் குழந்தைகளும், கல்லுாரி மாணவியரும் கழிப்பறை இல்லாததால், இரவில் இயற்கை உபாதைக்காக வெளியே செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அப்படி சென்ற பெண்ணை துாக்கி சென்று, கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்றிருக்கின்றனர். இப்போது, ஆட்சி மாறிய பின் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றனர்.
'அந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண், கவர்ச்சி உடையா அணிந்திருந்தாள்...' என, உன் அம்மாவை கேள்!
மதுவும், கஞ்சா போதையும் இளைஞர்களை சீரழிக்கிறது என்றால், அது போன்ற இளைஞர்கள், குழந்தைகளையும், மூதாட்டியரையும் சீரழிக்கின்றனர்.
மெத்த படித்து கை நிறைய சம்பளம் வாங்கும், ஐ.டி., இளைஞன் கூட போதைக்கு தப்புவதில்லை. சின்ன சின்ன பூத்தொட்டிகளில் வீட்டுக்குள்ளே கஞ்சா செடிகளை வளர்ப்பதும் நடந்து வருகிறது.
போதைக்கு துணை போவது நல்லதல்ல... இதே நிலை தொடர்ந்தால், வயிற்றில் வளரும் பெண் குழந்தைகளை கூட இனி விட்டு வைக்க மாட்டார்கள்!
- இப்படிக்கு, இந்துமதி.
